

குமரி மாவட்டத்தின் நீர்ஆதாரங்களான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இரந்து இன்று விநாடிக்கு 850 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் குமரியில் இருந்து ராதாபுரம் வரை 99 ஆயிரம் ஏக்கர் வேளாண் பாசன நிலங்கள் பயன்பெறும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் அணைகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் நேற்று குமரி மலையோர பகுதிகளில் கனமழை பெய்தது. சிற்றாறு ஒன்றில் அதிகபட்சமாக 144 மிமீ., மழை பெய்தது.
பூதப்பாண்டியில் 52 மிமீ., கன்னிமாரில் 104, நாகர்கோவிலில் 58, பேச்சிப்பாறையில் 113, பெருஞ்சாணியில் 102, புத்தன்அணையில் 99, சிவலோகத்தில் 117, சுருளகோட்டில் 95, பாலமோரில் 83, மாம்பழத்துறையாறில் 55, கோழிப்போர்விளையில் 32, அடையாமடையில் 42, ஆனைகிடங்கில் 53, முக்கடல் அணையில் 77 மிமீ., மழை பதிவாகியிருந்தது.
மழையால் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.66 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 1415 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 2273 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 74.89 அடி தண்ணீர் உள்ள நிலையில் அணைக்கு 1830 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1981 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது.
இதைப்போல் சிற்றாறு ஒன்றில் 17.09 அடி தண்ணீர் உள்ள நிலையில் உள்வரத்தாக 1398 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1307 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சிற்றாறு இரண்டில் 17.19 அடி தண்ணீர் உள்ள நிலையில் உள்வரத்தாக 807 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 672 கனஅடி வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில் வழக்கம்போல் ஜூன் மாதம் குமரி மாவட்டத்தில் பானத்திற்காக அணைகளில் இருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து விநாடிக்கு விநாடிக்கு 850 கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது.
இதை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் பேச்சிப்பாறை அணையில் இருந்து மதகை இயக்கி தண்ணீர் திறந்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் முன்னிலை வகித்தார்.
பின்னர் அமைச்சர் மனோதங்கராஜ் கூறுகையில்; கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த மழையினால் விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் கிடைத்து வருகிறது.
மேலும் தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, 2 அணைகளில் இருந்து கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்புகளில் பயன்பெறும் விவசாய நிலங்களின் பாசன பயன்பாட்டிற்காக விநாடிக்கு 850 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இத்தண்ணீர் மூலம் கன்னியாகுமரி மாவட்டம், மற்றும் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிற்கும் சேர்த்து மொத்தம் 99 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு தேவையான பாசன நீர் கிடைக்கும்.
குமரி மாவட்டத்தில் நீர் ஆதாரங்கள் அதிகம் இருக்கிறது. ஆனால் விவசாயம் குறைந்து வருகிறது. நீர்ஆதாரங்களை மேம்படுத்தும் பணி நடந்து வரும் நிலையில் விவசாயிகள் இன்னும் அதிகமான நிலப்பரப்பில் விவசாயத்தை மேற்கொண்டு வேளாண் வளத்தை பெருக்க முன்வரவேண்டும்.
தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை பயன்படுத்தி குமரியில் முதல் சாகுபடியான கன்னிப்பூ நடவுப்பணிகள் மேற்கொண்டுள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெறவேண்டும் என கேட்டுகொள்கிறேன். மேலும் குமரி மாவட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தி ஆக்கிரமிப்பு குளங்களை மீட்டு தூர்வரப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் விஜய்வசந்த், விஜயகுமார், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், எம்.ஆர்.காந்தி, விஜயதரணி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியண்ட்தாஸ், குமரி பாசனத்தறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, நீர்வள ஆதார அணைப்பு கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகரன், மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.