Last Updated : 04 Jun, 2021 05:32 PM

 

Published : 04 Jun 2021 05:32 PM
Last Updated : 04 Jun 2021 05:32 PM

புதுச்சேரியில் அமைச்சர்கள் பட்டியலை முதல்வரிடம் தருவதில் தொடர்ந்து பாஜக இழுபறி : சபாநாயகர் பதவி யாருக்கு என்பதில் சிக்கல்

புதுச்சேரியில் அமைச்சர் பட்டியலைக் கொடுப்பதில் பாஜக தரப்பில் இழுபறி நீடிக்கிறது. சபாநாயகர் பதவி யாருக்கு என்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் எம்.பி. ராஜீவ் சந்திரசேகர், மரியாதை நிமித்தச் சந்திப்பு எனக் குறிப்பிட்டுப் புறப்பட்டார்.

புதுவையில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக ரங்கசாமி பதவியேற்றுள்ளார். கூட்டணிக் கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே அமைச்சர்களைப் பங்கீடு செய்வதில் இழுபறி ஏற்பட்டது. ஒரு மாத காலம் நீடித்த இழுபறி முதல்வர் ரங்கசாமி பாஜக மேலிடத் தலைவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு பேசியதைத் தொடர்ந்து சுமுகத் தீர்வு ஏற்பட்டது. இதில் என்.ஆர்.காங்கிரஸுக்கு முதல்வர் தவிர்த்து 3 அமைச்சர்களும், பாஜகவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர்கள் பதவி வழங்கவும் உடன்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து பாஜகவில் அமைச்சர்கள் பதவி, சபாநாயகர் பதவி யாருக்கு என்பது குறித்துக் கட்சித் தரப்பில் ஆலோசித்து வந்தனர். தேர்தலில் வென்று ஒரு மாதமாகியும் அமைச்சரவை அமைவதில் காலதாமதம் ஆவதாக விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் பாஜக தரப்பிலான அமைச்சர்கள், சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுபவர் பட்டியலை முதல்வர் ரங்கசாமியிடம் மேலிடப் பொறுப்பாளர்கள் இன்று தருவார்கள் என்று பாஜக தரப்பில் தெரிவித்தனர். இச்சூழலில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் புதுச்சேரிக்கு வந்தார். அவர் முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டில் இன்று பிற்பகல் சந்தித்து அரை மணி நேரம் பேசினார்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. கூறுகையில், "முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு மரியாதை நிமித்தமான சந்திப்பு இது. எம்முடிவும் எடுக்கப்படவில்லை" என்று குறிப்பிட்டுப் புறப்பட்டார்.

முதல்வரிடம் பாஜக தரப்பில் பட்டியல் ஏதும் தரப்படவில்லை.

சபாநாயகர் பதவி யாருக்கு என்பதில் சிக்கல்

தாமதம் ஏன் என்று பாஜக தரப்பில் விசாரித்தபோது, "என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணியில் பாஜகவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சபாநாயகர் பதவிக்கு மணவெளி தொகுதியில் வெற்றி பெற்ற செல்வம் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் எனத் தகவல் வெளியானது. இந்நிலையில் செல்வம் சபாநாயகர் பதவியை ஏற்கத் தயக்கம் காட்டினார். இதனால் சபாநாயகர் பதவியை நியமன எம்எல்ஏக்களில் ஒருவருக்கு வழங்க பாஜக தரப்பில் முடிவு செய்தனர். இதற்கு மக்களால் தேர்வான பாஜக எம்எல்ஏக்கள் அதிருப்தியை மேலிடப் பொறுப்பாளரிடம் நேரடியாகத் தெரிவித்தனர். இதனால் இவ்விஷயங்களை மேலிடத்தில் சொல்லி முடிவு எடுக்க வேண்டியுள்ளதால் தாமதமாகிறது" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x