

வால்பாறை அருகே காட்டு யானை தாக்கியதில் எஸ்டேட் இரவுக் காவலர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதியில் நுழைந்து வீடுகள், மளிகைக் கடைகள், சத்துணவு மையங்கள், ரேஷன் கடைகளைச் சேதப்படுத்தி உள்ளே இருக்கும் அரிசி, உப்பு ஆகியவற்றைச் சாப்பிட்டுச் செல்கின்றன.
இரவு நேரங்களில் குடியிருப்புகளில் நுழையும் யானைகளால் தொழிலாளர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். குடியிருப்புகளில் நுழையும் யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வால்பாறை அருகே வாட்டர் ஃபால்ஸ் இரண்டாவது பிரிவில் டென்னிஸ் பங்களாவில் மாணிக்கம் (60) என்பவர் இரவுக் காவலராகப் பணியாற்றி வந்தார். வழக்கம்போல் நேற்று இரவு காவல் பணிக்கும் அவர் சென்றார். இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, பங்களா பகுதியில் சுற்றித் திரிந்தது.
அப்போது யானை இரவுக் காவலர் மாணிக்கத்தைத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் மற்றும் போலீஸார், மாணிக்கத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காட்டு யானை தாக்கியதில் எஸ்டேட் இரவுக் காவலர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.