

திருப்பூரில் கரோனா தொற்று சிகிச்சைக்கு ரூ.19 லட்சம் கட்டணம் வசூலித்ததாகத் தனியார் மருத்துவமனை மீது அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், புகார் உறுதி செய்யப்பட்டதால், கரோனா சிகிச்சைக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்று ரத்து செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையம் அருகே ஆண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் மா.சுப்பிரமணியன் (62). மே 3-ம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெருமாநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 9-ம் தேதி உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு, ஒரு ரெம்டெசிவிர் மருந்தின் விலை ரூ.40 ஆயிரம் வீதம் கட்டணம் நிர்ணயித்து, 5 மருந்துக் குப்பிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கட்டணம் உறுதி செய்யப்பட்டு மருந்து செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி தனது குடும்பத்தினரை அலைபேசி மூலம் அழைத்த சுப்பிரமணியன், தனக்கு மூச்சுத்திணறல் இருப்பதாகவும், நீண்ட நேரம் சத்தம் போட்டும் யாரும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து சுப்பிரமணியனின் குடும்பத்தினர், மருத்துவமனை செவிலியர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர்.
பிறகு மருத்துவமனைக்குக் குடும்பத்தினர் சென்றபோது, ஆக்சிஜன் இருப்பு குறைவாக இருப்பதால் சுப்பிரமணியனை அழைத்துச் செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு வழியின்றி சுப்பிரமணியனை அவரது குடும்பத்தினர் வேறு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி சுப்பிரமணியன் 25-ம் தேதி உயிரிழந்தார்.
எனினும் மருத்துவமனை தரப்பில் ரசீது எதுவும் தராமல், ரூ.19 லட்சத்து 5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் அதிருப்தி அடைந்த குடும்பத்தினர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மாவட்ட சுகாதார இணை இயக்குநர், சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்க உத்தரவிட்டார்.
ரத்தும், எச்சரிக்கையும்
இது தொடர்பாக, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் திருப்பூர் இணை இயக்குநர் த.கி.பாக்கியலெட்சுமி, ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ''திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் செயல்பட்டு வந்த செளம்யா மருத்துவமனை நிர்வாகத்தினர், கரோனா நோயாளிகளிடம் அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்பதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையிலும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படியும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மாவட்ட இணை இயக்குநர் தலைமையில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டோம்.
அதில் புகார் உறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனைக்கு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக் காலத்தில், எவ்விதப் புகார்களுக்கும் இடமளிக்காமல் பொதுமக்களுக்குச் சேவை மனப்பான்மையுடன் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே தனியார் மருத்துவமனைகள் பெற வேண்டும். இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது'' என்று தெரிவித்தார்.