சேலத்தில் கோவிட் பரிசோதனை முடிவுகளைத் தவறாக அறிவித்த 2 தனியார் ஆய்வகங்களுக்கு சீல்

அமைச்சர் செந்தில் பாலாஜி: கோப்புப்படம்
அமைச்சர் செந்தில் பாலாஜி: கோப்புப்படம்
Updated on
2 min read

சேலத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை உண்மைக்கு மாறாக அறிவித்த 2 தனியார் மருத்துவப் பரிசோதனைக் கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தவறு செய்யும் தனியார் மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

சேலம் இரும்பாலை வளாக கரோனா சிகிச்சை மையத்தில், ஆக்சிஜன் வசதி கொண்ட 500 படுக்கைகளைக் கூடுதலாக அமைக்கும் பணிகளை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று மாலை (ஜூன் 03) ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கார்மேகம், எம்.பி.க்கள் சேலம் பார்த்திபன், நாமக்கல் சின்ராஜ், சேலம் வடக்குத் தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:

"சேலம் இரும்பாலை வளாக கரோனா சிகிச்சை மையத்தில், கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்கும் பணி இன்னும் 5 நாட்களில் முடிக்கப்பட்டு, அதில் சிகிச்சை அளிக்கும் பணி தொடங்கப்படும். மாவட்டத்தில், கரோனா தொற்று பாதிப்பு அதிகம் கண்டறியப்படும் இடங்களில், அங்கேயே மருத்துவ முகாம் நடத்தி, மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் அரசு ஆய்வகத்தில் கரோனா தொற்று கண்டறிய தினமும் சராசரியாக 5,200 மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. தனியார் மருத்துவ ஆய்வகங்களில் 1,600 மாதிரிகள் வரை பரிசோதிக்கப்படுகின்றன. அரசு ஆய்வகத்தின் பரிசோதனை முடிவுகளில் சராசரியாக 11 முதல் 12 சதவீதம் பாசிட்டிவ் வருகிறது.

ஆனால், தனியார் ஆய்வகங்களின் முடிவுகளில் 51 சதவீதம் பாசிட்டிவ் வருகிறது. எனவே, அதிக பாசிட்டிவ் வந்த இரு ஆய்வகங்களில், பாசிட்டிவ் என அறிவிக்கப்பட்ட மாதிரிகளை, அரசு ஆய்வகத்தில் பரிசோதித்தபோது, அவை நெகட்டிவ் என்று வந்தது. இதையடுத்து, சேலம் ஐந்து ரோடு அருகே செயல்படும் தனியார் மருத்துவமனை ஆய்வகம், அஸ்தம்பட்டி அருகே செயல்படும் தனியார் மருத்துவமனை ஆய்வகம் ஆகியவற்றுக்கு சீல் வைக்கப்பட்டது. கண்காணிப்பு மேற்கொண்டு, தவறு செய்யும் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சேலம் மாவட்டத்தில், மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்குப் படுக்கை கிடைக்கவில்லை என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது. இரும்பாலை கரோனா சிகிச்சை மையத்தில், 270 படுக்கைகள் காலியாக உள்ளன. குறுகிய காலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியமாக மாற்ற வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.

கூடுதல் விலையில் மின்சாரம் கொள்முதலா?

தமிழகத்தில், தேர்தலுக்காக 6 மாதங்களாக, மின் பராமரிப்புப் பணிகளைச் செய்யாமல் விட்டனர். அதனால், பல இடங்களில், மின் பாதைகள் மீது மரக்கிளைகள் படர்ந்து, மின் தடை ஏற்படுகிறது. அதனைத் தவிர்க்க பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்வரின் உத்தரவுக்கிணங்க, ஊரடங்கு காலம் முடியும் வரை, 24 மணி நேரமும் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும். இரவு நேரத்திலும் மின் தடை ஏற்படாமல் தடுக்க, அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின்போது, கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு சட்டப்பேரவையில் உரிய பதில் அளிக்கப்படும்.

தமிழகத்தில் கரோனா சிகிச்சை மேற்கொண்டு வரும் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் 24 மணி நேரமும் தடையில்லா உயரழுத்த மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் முடிவடைந்துவிட்டன".

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in