

தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு தரக் கோரியும், மாநில அரசுகளின் மேல் நிதி சுமையை ஏற்றக்கூடாது என குடியரசுத் தலைவருக்கு புதுச்சேரி காங்கிரஸார் ராஜ்நிவாஸில் மனு அளித்தனர்.
தெலுங்கானாவிலுள்ள ஆளுநர் தமிழிசை, காணொலியில் அவர்களுடன் உரையாடி, குடியரசுத்தலைவருக்கு அனுப்புவதாக உறுதி தந்தார்.
புதுச்சேரி காங்கிரஸ் மாநிலத்தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், எம்எல்ஏ வைத்தியநாதன் உள்ளிட்டோர் ராஜ்நிவாஸுக்கு இன்று சென்றனர். தற்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை, தெலுங்கானா ஆளுநராக உள்ளதால் அங்கு சென்றுள்ளார்.
காங்கிரஸாருடன் காணொலி மூலமாக துணைநிலை ஆளுநர் தமிழிசை கலந்துரையாடினார்.
அப்போது காங்கிரஸ் தரப்பில் குடியரசுத்தலைவருக்கு அனுப்புவதற்கான மனுவை ராஜ்நிவாஸில் அளித்தனர். அம்மனுவை ஆளுநர் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி பெற்றுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து மனுவிலுள்ள விவரங்களை ஆளுநரிடம் காணொலியில் காங்கிரஸார் கூறுகையில், " தடுப்பூசி போடும் பணிகளை விரைவுப்படுத்தவேண்டும். தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு தரவேண்டும். மாநில அரசுகளின் மேல் நிதி சுமையை ஏற்றக்கூடாது" என்று குறிப்பிட்டனர்.
அதையடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், "ஜனநாயக முறைப்படி எந்த அமைப்பு கோரிக்கை வைத்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு உரிய முறையில் அரசு செயல்படும். இந்த மனுவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கிறேன். புதுச்சேரியில் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. போதிய அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. தேவையான தடுப்பூசி வாங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது." என்று குறிப்பிட்டார்.