தேனி, விருதுநகரில் கரோனா சிகிச்சை மையங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
விருதுநகரில் 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகள், தேனியில் 300 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக இன்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசின் இன்றைய செய்திக்குறிப்பு:
“விருதுநகர் அரசு மருத்துவமனை அருகிலுள்ள கே.வி.எஸ்.நூற்றாண்டு பள்ளி வளாகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலமாக இன்று திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 417 படுக்கைகள், 4681 சாதாரண படுக்கைகள் மற்றும் 52 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், என மொத்தம் 5150 படுக்கை வசதிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 27 கரோனா சிகிச்சை மையங்களில் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் 334 ஆக்சிஜன் படுக்கைகள், 415 சாதாரண படுக்கைகள் மற்றும் 365 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், என மொத்தம் 1114 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், கோம்பையில் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியக் கட்டடத்தில் 300 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் மூலம், கோம்பை, சின்னமனூர் மற்றும் கம்பம் ஆகிய பகுதியில் உள்ள மக்கள் இம்மையத்தில் கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இம்மையத்தில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ஆக்சிஜன் வசதியுடன் 631 படுக்கைகளும், 422 சாதாரண படுக்கைகளும், 70 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும், என மொத்தம் 1123 படுக்கை வசதிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் 6 அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், 6 கரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் 8 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1525 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்ச்சிகளில் தலைமைச் செயலகத்திலிருந்து தலைமைச் செயலாளர் இறையன்பு, விருதுநகரிலிருந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மக்களவை உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், தங்கபாண்டியன், ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் கண்ணன், தேனியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணகுமார், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி, ஆகியோரும் கலந்து கொண்டனர்”.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
