Published : 04 Jun 2021 01:39 PM
Last Updated : 04 Jun 2021 01:39 PM

தினமும் 1 கோடி தடுப்பூசி செலுத்த உத்தரவிடுக: குடியரசுத் தலைவருக்கு கே.எஸ்.அழகிரி கடிதம்

நாட்டு மக்கள் அனைவருக்கும் தினமும் 1 கோடி தடுப்பூசிகள் வீதம் இலவசமாகச் செலுத்த வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜூன் 04) குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எழுதிய கடிதம்:

"இதுவரை இல்லாத பேரழிவையும், அளவிட முடியாத வலியையும் ஒவ்வொரு இந்தியக் குடும்பத்திலும் கரோனா தொற்று ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கரோனாவை எதிர்த்துப் போராடும் கடமையைச் செய்ய மோடி அரசு தவறிவிட்டது கவலையளிக்கிறது. கரோனாவை எதிர்த்துப் போராடி மக்களைக் காப்பாற்றாமல் மோடி அரசு கைவிட்டுவிட்டது. தவறான நிர்வாகத்தால் பாஜக அரசு கிரிமினல் குற்றத்தை இழைத்துள்ளது என்பதுதான் உண்மை.

அதிகரித்து வரும் கரோனா தொற்றுக்குத் தடுப்பூசி மட்டுமே பாதுகாப்பு. ஆனால், மோடி அரசின் தடுப்பூசி போடும் வியூகம் ஆபத்தானதாகவும் தவறானதாகவும் இருக்கிறது. தடுப்பூசி போடுவதற்கான கடமையைச் செய்ய நமது அரசு தவறிவிட்டது.

தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதையே நமது அரசு முற்றிலும் மறந்துவிட்டது. நமது அரசு வேண்டுமென்றே தடுப்பூசி திட்டத்தை மெதுவாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. பல வகை விலையுடன் கூடிய தடுப்பூசி மருந்துகளைத் தயாரிக்க நமது அரசு உடந்தையாக உள்ளது. அதாவது, ஒரே தடுப்பூசிக்குப் பலவிதமான விலைகளை நிர்ணயிப்பதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது.

மற்ற நாடுகள் எல்லாம் 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்யத் தொடங்கிவிட்ட நிலையில், இந்தியாவில் அதனைச் செய்ய மோடி அரசு தவறிவிட்டது. தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான முதல் ஆர்டரை கடந்த ஜனவரி மாதம்தான் கொடுத்தனர்.

கிடைத்திருக்கும் வெளிப்படையான தகவல்களின்படி, 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், மோடி அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து இன்று வரை வெறும் 39 கோடி தடுப்பூசிகளை மட்டுமே ஆர்டர் செய்துள்ளனர்.

2021 மே மாதம் 31ஆம் தேதி வரை, 21 கோடியே 31 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால், 4 கோடியே 45 லட்சம் பேருக்கு மட்டுமே இருமுறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதாவது, இந்த எண்ணிக்கை இந்திய மக்கள்தொகையில் 3.17 சதவிகிதம் மட்டுமே.

கடந்த 134 நாட்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 16 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதே நிலை தொடர்ந்தால், வயதானவர்களுக்குத் தடுப்பூசி போட்டு முடிப்பதற்கு 3 ஆண்டுகள் ஆகிவிடும். இந்தச் சூழலில், 'கரோனாவின் மூன்றாவது அலையின்போது நமது மக்களை எப்படிக் காப்பாற்ற முடியும்?' என்ற கேள்விக்கு மோடி அரசிடமிருந்து பதில் தேவை.

கரோனா தொற்றால் நம் மக்கள் பாதிக்கப்பட்டபோது, மோடி அரசு வெளிநாடுகளுக்குத் தடுப்பூசி மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் மும்முரமாக இருந்தது. இதுவரை, 6 கோடியே 63 லட்சம் தடுப்பூசி டோஸ்களை மற்ற நாடுகளுக்கு மத்திய பாஜக அரசு ஏற்றுமதி செய்துள்ளது. இது இந்த தேசத்துக்கு இழைத்த மிகப் பெரிய அவமதிப்பு.

தடுப்பூசிகளுக்குப் பல விலைகளை மோடி அரசு நிர்ணயித்தது, மக்களின் துயரத்திலிருந்து லாபம் ஈட்டியதற்கு இதுவே உதாரணம்.

சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் ஒரு டோஸ் விலை மோடி அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு ரூ.300 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஒரு டோஸ் மோடி அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு ரூ.600 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாறுபட்ட விலையை நிர்ணயித்து, மக்களின் துயரத்திலிருந்து லாபம் சம்பாதிக்க மோடி அரசே துணைபோகிறது.

மத்திய பாஜக அரசே தடுப்பூசி டோஸ்களைக் கொள்முதல் செய்து அதனை மாநில அரசுகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இலவசமாக வழங்கி மக்களுக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்பதே காலத்தின் தேவையாக இருக்கிறது. இதில், குறை ஏற்பட்டால், இந்தியாவுக்கும், அதன் மக்களுக்கும் செய்யும் அவமதிப்பாகக் கருதப்படும்.

18 வயதுக்கு மேற்பட்ட இளம் தலைமுறையினருக்கு 2021 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு தடுப்பூசி போட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நம் மக்களைக் காப்பாற்ற இது ஒன்றே வழி. தற்போது தினமும் 16 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடுவது போல் இல்லாமல், தினமும் குறைந்தது 1 கோடி பேருக்குத் தடுப்பூசி போட்டால் மட்டுமே இதற்குத் தீர்வு.

எனவே, தினமும் 1 கோடி தடுப்பூசியை இலவசமாகப் போட மோடி அரசுக்கு உத்தரவிட உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

கரோனா தொற்றை முறியடிக்க இது ஒன்றே வழி. ஒவ்வொரு இந்தியனும் கரோனாவை வென்றெடுக்க இது மட்டுமே தீர்வு".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x