டிஜிட்டல் ஸ்கேனிங் திட்டம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்

டிஜிட்டல் ஸ்கேனிங் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு.
டிஜிட்டல் ஸ்கேனிங் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு.
Updated on
1 min read

இந்து சமய அறநிலையத்துறையின் பழமையான ஆவணங்கள் மற்றும் கோப்புகளைப் பாதுகாக்கும் வகையில், டிஜிட்டல் ஸ்கேனிங் திட்டத்தை அத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 04) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில் பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வருவது போன்று இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்திலும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இத்துறையின் பழமையான ஆவணங்கள் மற்றும் கோப்புகளை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் திட்டமும் ஒன்றாகும்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரால் இன்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள பழமையான கோப்புகளை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்து சமய மற்றும் அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களின் நிர்வாகங்கள், திருப்பணிகள், நிலங்கள் குத்தகை உள்ளிட்ட பொருண்மைகள் பரிசீலிக்கப்பட்டு ஆணையர் அளவிலும், அரசு அளவிலும் ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன. இவ்வாறான கோப்புகள் பதிவறையில் பாதுகாத்து வரப்படுகின்றன.

நீண்டகால கோப்புகளைப் பேணிப் பாதுகாத்திடும் பொருட்டு டிஜிட்டல் முறையின்படி எடுத்துக் கோப்பாக பாதுகாப்பது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமான ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் நிலையான முடிவு கோப்புகள் உள்ளிட்ட கோப்புகளையும், பதிவேடுகளையும் டிஜிட்டல் முறை தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்திப் பாதுகாக்கும் பணிக்கான திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள பழமையான கோப்புகள் காலப்போக்கில் சிதிலமடையாத வகையில் பேணிக் காக்க முடியும்.

இம்முறையில் இத்துறையின் சார்நிலை அலுவலகங்களில் உள்ள நீண்டகாலக் கோப்புகளையும் பேணிப் பாதுகாத்திட படிப்படியாக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுச் செயல்படுத்தப்படவுள்ளது".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in