Published : 04 Jun 2021 12:21 PM
Last Updated : 04 Jun 2021 12:21 PM

முதல்வருடன் சீமான், பாரதிராஜா சந்திப்பு: எழுவர் விடுதலை குறித்து வலியுறுத்தல்

முதல்வர் ஸ்டாலினை சீமான், பாரதிராஜா இருவரும் சந்தித்து கரோனா நிவாரண நிதியை வழங்கினர். எழுவர் விடுதலை குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தியதாக சீமான் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அப்போது அவரிடம் கரோனா நிவாரண நிதியை வழங்கினர்.

பின்னர் வெளியே வந்த சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

''முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினோம். ஏழு பேர் விடுதலை குறித்துப் பேசினோம். அப்போது எழுவர் விடுதலை விவகாரத்தில் அரசு உறுதியாக உள்ளதாக முதல்வர் தெரிவித்தார். வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வருகிறது. அதில் வரும் போக்கை வைத்து நகர்வோம் என்று முதல்வர் சொன்னார். விடாமல் தொடர்ச்சியாகப் போராடுவோம் என்று என்னிடம் சொன்னார்''.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

கூட்டணியில் உள்ள காங்கிரஸே எதிர்க்கிறதே?
அதை விடுங்கள்.

மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்ய முடியாதா?

அதையும் பேசியிருக்கிறோம். அதை விட்டுவிட மாட்டோம், தொடர்ச்சியாகக் கண்காணித்துச் செய்வோம் என முதல்வர் உறுதி அளித்துள்ளார். ஆகவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எப்படி வருகிறது என்று பார்ப்போம், அதன் பின்னர் முடிவெடுப்போம் என்று முதல்வர் கூறியுள்ளார்.

திமுகவின் 30 நாட்கள் ஆட்சி எப்படி உள்ளது?

சரியாக இருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் வேகமாக இயங்குகிறார்கள், மருத்துவத் துறையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சிறப்பாக இயங்குகிறார்கள். அழைத்துப் பாராட்டுகிறோம். கரோனா தொற்றில் அதைக் கட்டுப்படுத்துவதே பெரும்பாடாக உள்ளது.

ஏழு பேர் விடுதலையில் முதல்வர் உறுதியளித்தாரா?

ஏழு பேர் விடுதலையில் நான் மிக உறுதியாக இருக்கிறேன் என்று முதல்வர் கூறினார்.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x