

வடகிழக்கு பருவமழையின் வரலாறு காணாத தீவிரத்துக்கு புதுச்சேரி நெற்பயிர் வயல்கள் ஆளாகியுள்ளன. சுமார் 8,900 ஹெக்டேர் பரப்பளவுக்கு நெற்பயிர் வயல்கள் கடும் சேதமடைந்துள்ளன.
11,418 நெற்பயிர் விவசாயிகள் இந்த எதிர்பாராத மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்பில் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த ஒரு ஹெக்டேர் பரப்பளவுக்கு ரூ.20,000 வரை நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.17.91 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசத்தில் மேலும் 1,544 ஹெக்டேர் கரும்புப் பயிர்களும், 8 ஹெக்டேர் பரப்பளவு வெற்றிலைப் பயிர்களும் சேதமடைந்துள்ளன.
இதில் வெற்றிலை பயிர் பகுதிகளுக்கு அரசு ஹெக்டேருக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவித்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.15,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காய்கனிகள் சேதம் 168.10 ஹெக்டேர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றிற்கு ரூ.15,000 அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மலர்கள், பருத்தி, தானியங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மதிப்பிடப்படவிருக்கின்றன. 297.73 ஹெக்டேர் வாழைமரப் பகுதிகள் சேதமடைந்துள்ளன, இதற்காக ஹெக்டேர் ஒன்றிற்கு ரூ.35,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரணத்துக்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகையான ரூ.150 கோடியில் பயிர் நாசத்துக்கு மட்டும் ரூ.22.08 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
கடந்த நூறாண்டுகளில் இத்தகைய மழையை புதுச்சேரி சந்தித்ததில்லை என்று கூறும் அதிகாரிகள், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என்று 3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரே மாதத்தில் கொட்டித் தீர்த்துள்ளது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.