

கோதாவரி - காவிரி நதி இணைப்புதிட்டத்தை விரைவாக செயல்படுத்துமாறு பிரதமர் மோடிக்கு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு நேற்று அவர் எழுதியுள்ள கடிதம்:
தண்ணீர் பற்றாக்குறை மாநிலமான தமிழகத்தில் கோதாவரி - காவிரி நதி இணைப்பு திட்டம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். எனவே, அந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்துமாறு நான்தமிழக முதல்வராக இருந்தபோது தங்களைச் சந்திக்கும் போதெல்லாம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இந்நிலையில், மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் தேசிய தண்ணீர் மேம்பாட்டு முகமை, கோதாவரி - காவிரி நதி இணைப்பு திட்டம் தொடர்பான வரைவு அறிக்கையை இறுதிசெய்திருப்பதாகவும் இதுதொடர்பாக மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டிருப்பதாகவும் வந்துள்ள செய்தியை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
எனது வேண்டுகோளை ஏற்றுஇந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக விவசாயிகள் சார்பிலும் எனது சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் அரசின் மிகப் பெரிய இந்தமுடிவு தமிழக வளர்ச்சி வரலாற்றில் குறிப்பிடப்படும். அதோடு கூட்டாட்சி ஒத்துழைப்புக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழும். எனவே லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு நலம் பயக்கும் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு மீண்டும் ஒருமுறை தங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.