

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுகவின் நிலைப் பாடு குறித்து இன்று கூடும் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம், சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடக்கிறது. முதலில் செயற்குழுவும், அதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டமும் நடக்கிறது. கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகிக்கிறார். இதில் கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா சிறப்புரையாற்றுகிறார். அமைச் சர்கள், எம்எல்ஏக்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என 2,800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் கூட்டத்துக்கு வரு வதை தவிர்க்க வேண்டும். எம்எல்ஏ விடுதியில் இருந்து புறப்படும் அரசுப் பேருந்தில்தான் வரவேண்டும் என ஏற்கனவே அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் நடக்கும் இந்தப் பொதுக்குழு கூட்டம், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ‘இலக்கு 234’ என்ற கருத்தை சொல்லி வருவதால், தேர்தலை தனித்து சந்திக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்தும் கூட்டணி நிலைப்பாடு குறித்தும் பொதுக்குழுவில் ஜெயலலிதா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை பொதுச்செயலாளரான ஜெயலலிதாவுக்கு வழங்குவது, தமிழக வெள்ள பாதிப்புகள் தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை பெறுவது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.