

முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு 25 சதவீத படுக்கைகள் ஒதுக்கீட்டில் இப்போதுள்ள சூழலுக்கு ஏற்ப திருத்தம் மேற்கொள்வது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் மருத்துவமனை கட்டணத்தை முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7-ம் தேதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த மே 22-ம் தேதி விரிவான அரசாணையை வெளியிட்டது.
அதில், "முதல்வரின் அறிவிப்பின்படி அதிதீவிர மற்றும் அதிதீவிரமில்லாத அனைத்து நோயாளிகளுக்கும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ஆகும் செலவுகள் காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்படும். தேவையான மருந்துகள்மற்றும் அனைத்து பரிசோதனைகளுக்குமான கூடுதல் கட்டணம், பயனாளிகள் சார்பில் மருத்துவ காப்பீடு நிறுவனம் மூலம் மருத்துவமனைக்கு நேரடியாக வழங்கப்படும்.
தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் 104 என்ற எண்ணில் புகார்தெரிவிக்கலாம்" என தெரிவிக்கப்பட்டது. இதில், காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் எத்தனை சதவீதம் படுக்கைகளை, எந்தவகை சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில், பல தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் நோயாளிகளை அனுமதிப்பதில்லை என புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயன்பெறலாம் என நோயாளிகளின் உறவினர்கள் தனியார் மருத்துவமனைகளைத் தொடர்புகொண்டால், பெரும்பாலும் ‘படுக்கை காலியாக இல்லை' என்றே பதில் வருகிறது. வற்புறுத்திக் கேட்டால், முன்பணம் கட்டினால் சேர்த்துக் கொள்கிறோம் என்கின்றனர்.
முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கரோனா நோயாளிகள் பயன்பெற ஏதுவாக, தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீத படுக்கைகளை காப்பீட்டுத் திட்டத்துக்கென ஒதுக்க வேண்டும் என கடந்த 2020 ஜூன் 5-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஒதுக்கீடு சாதாரண படுக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் உள்ளது. தற்போதைய சூழலில், ஆக்சிஜன் படுக்கை தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
எனவே, அதற்கு ஏற்ப மொத்தம் உள்ள 25 சதவீத ஒதுக்கீட்டில், 15 சதவீதத்தை ஆக்சிஜன் படுக்கை தேவையான தீவிர சிகிச்சைக்கும், 10 சதவீதத்தை சாதாரண படுக்கைகளுக்கும் ஒதுக்கி புதிய அரசாணை வெளியிட்டால் ஏழை நோயாளிகள் பலர் பயன்பெறுவர்.
இடஒதுக்கீட்டின்படி காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையை தினந்தோறும் வெளியிடப்படும் ஊடக அறிக்கையிலும், https://tncovidbeds.tnega.org என்ற அரசின் இணையதளத்திலும் தெரிவித்தால், ‘படுக்கை காலியாக இல்லை' என்று மருத்துவமனைகள் பொய்யான தகவலை தெரிவிக்க முடியாது. வெளிப்படைத் தன்மை உறுதிப்படுத்தப்படும். முதல்வரின் திட்டம் ஏழை நோயாளிகளை சென்றடையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
திடீர் ஆய்வு நடத்தப்படும்
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் நோயாளிகளை அனுமதிக்காத மருத்துவமனைகள் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டால், அதன்மீது நேரடியாக விசாரணை மேற்கொள்கிறேன்.
நாளை (இன்று) வேலூர், ஆற்காடு, அரக்கோணம், திருப்பத்தூர், வாணியம்பாடி ஆகியஇடங்களில் உள்ள மருத்துவமனைகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளேன். இதேபோன்று, மற்ற இடங்களிலும் ஆய்வுகள் நடைபெறும்.
முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 25 சதவீத படுக்கைகளை ஒதுக்கும் அரசாணையில் தேவையான திருத்தம் மேற்கொள்வது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் எவ்வளவு பேர் பயன்பெற்றுள்ளார்கள் என்பது குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளோம்" என்றார்.