

கரோனா கவச உடையணிந்து, சிகிச்சையில் உள்ள போலீஸாரிடம் காவல் ஆணைர் சங்கர் ஜிவால் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
கரோனா இரண்டாவது அலையை தடுக்கும் வகையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வரும் 7-ம் தேதி காலை 6 மணிவரை தளர்வுகளில்லாத முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் முழு ஊரடங்கு கண்காணிப்பு பணிகளை காவல்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.
சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகளை செக்டார்களாக வகைப்படுத்தி உரிய சாலை தடுப்புகள் மற்றும் வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கின்றனர். மிக அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் செல்ல இ-பதிவு சான்று கட்டாயமாக்கப்பட்டு, இ-பதிவு வைத்திராத பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி முழு ஊரடங்கை மீறியதாக சென்னையில் நேற்று முன்தினம் மட்டும் 4,504 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,525 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முழு ஊரடங்கு முடிய இன்றும் 3 நாட்களே உள்ள நிலையில் கண்காணிப்பை போலீஸார் மேலும் பலப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் மாலை சென்னை, எழும்பூரிலுள்ள காவலர் மருத்துவமனைக்கு சென்று, கரோனா கவச உடையணிந்து கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் போலீஸார், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் காவல் துறையினருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவமைனையின் மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினரிடம் கேட்டறிந்தும் மருத்துவ பணியாளர்களின் பணியினை பாராட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.