Published : 04 Jun 2021 03:14 AM
Last Updated : 04 Jun 2021 03:14 AM

வெளிப்புற கிருமிநாசினி தெளிப்பு கரோனாவை ஒழிக்காது; மக்கள், தலைவர்களிடம் விழிப்புணர்வு இல்லை: வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகள்

சென்னை

வெளிப்புற கிருமிநாசினி தெளிப்பு கரோனாவை ஒழிக்காது என்ற விழிப்புணர்வு பொதுமக்கள், அரசியல்தலைவர்களிடம் இல்லாத நிலையில், அதை வெளியில் சொல்ல முடியாமல் உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கரோனா முதல் அலை பரவியபோது, தடுப்பு நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறை, தீயணைப்புத் துறை, குடிசை மாற்று வாரியம், கோயம்பேடு சந்தை நிர்வாகம் உள்ளிட்டவை உயரமான கட்டிடங்கள், சாலைகள், வளாகங்கள் போன்ற வெளிப்புறங்களில் கிருமிநாசினி தெளிப்பில் சிறப்பு கவனம் செலுத்தின. கிருமிநாசினி தெளிப்பு சுரங்கத்தையும் அமைத்தனர். இந்த சுரங்கத்தால் கரோனா ஒழியாது என மத்திய அரசு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அந்த முறை கைவிடப்பட்டது.

மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களில், “வெளிப்புறங்களில் கிருமிநாசினி தெளிக்கத் தேவையில்லை. உள்புறங்களில் அடிக்கடி தொடும் இடங்களில் கிருமிநீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தியுள்ளன.

உலக சுகாதார நிறுவனமும், “தெருக்கள், சந்தைகள், பக்கவாட்டு சுவர்கள் போன்ற வெளிப்புறங்களில் கிருமிநாசினி தெளிப்பதால் கரோனா வைரஸ் அழியாது. குறிப்பாக அழுக்கான பகுதிகள், குப்பைகள் மீது தெளிப்பதால் கிருமிநாசினிகள் அதன் திறனை இழக்கின்றன. வெளிப்புறங்களில் தெளிப்பதால் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படும்” என அறிவித்துள்ளது.

அதன் பின்னரும் உள்ளாட்சி அமைப்புகளால் மட்டும் 20,510 கைத்தெளிப்பான்கள், 3,718 வாகனத்தில் பொருத்தப்பட்ட தெளிப்பான்கள், 8,191 ராட்சத தெளிப்பான்கள், 243 ஜெட்ராடிங் இயந்திரங்கள் உட்பட 420 வாகனங்களைக் கொண்டு சாலைகள், உயரமான கட்டிடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டன. சென்னையில் ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன. இதனால் கரோனா தொற்று பரவல் குறையவில்லை. இந்த பணிகளால் அரசின் பல கோடி ரூபாய் வீணடிக்கப்படுகிறது.

இதை அறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், வெளிப்புறங்களில் இயந்திரங்களைக் கொண்டு கிருமிநாசினி தெளிப்பதை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதனால் 2-வது அலையில் இயந்திர கிருமிநாசினி தெளிப்பு குறைந்தது. அதே நேரத்தில், பொதுமக்களும், அவர்களின் நிர்பந்தத்தால் அரசியல்வாதிகளும் பல இடங்களில் கிருமிநாசினி தெளிக்க உள்ளாட்சி அமைப்புகளை அறிவுறுத்துகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளும், கிருமிநாசினியை வெளிப்பகுதியில் தெளித்து வருகின்றன. இந்த பணி கரோனாவை ஒழிக்காது என கூற முடியாமல் சுகாதாரத் துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

சமீபத்தில் கோவையில் முதல்வர் ஸ்டாலினுடன் மேடையில் இருந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், “வெளியில் கிருமிநாசினி தெளிப்பு கரோனாவை ஒழிக்காது. அவ்வாறு தெளிப்பதை கைவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். இந்நிலையில் அண்ணாநகர் தொகுதி எம்எல்ஏ எம்.கே.மோகன் தனது சொந்த செலவில் தலா ரூ.3.75 லட்சம் செலவில் 24 கிருமிநாசினி தெளிப்பு வாகனங்களை சென்னை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை கேட்டபோது, "சந்தைப் பகுதிகளில் கிருமிநீக்க பணிகளுக்கு இது பயன்படும்" என்றனர்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “வாய் மற்றும் மூக்கிலிருந்து வெளியேறும் காற்றில் கலந்து வரும் திரவத் துளிகளை நாம் சுவாசிக்கும்போதும், அவை படிந்த கை விரல்களைக் கொண்டு மூக்கு, வாய், கண்களை தொடும்போதும் கரோனா பரவுகிறது. இப்பரவலை கிருமிநாசினி இயந்திரங்கள் எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. இது குறித்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x