Published : 04 Jun 2021 03:14 AM
Last Updated : 04 Jun 2021 03:14 AM

ஊடகத்தின் உண்மைக்கு சவாலாக சமூக ஊடகங்கள்: அரசியல் அறிவியல் வல்லுநர் பிரதாப் பானு மேத்தா தகவல்

சென்னை

ஊடகத்தின் அடையாளம் மற்றும் உண்மைத் தன்மைக்கு சமூக ஊடகங்கள் பெரும் சவாலாக இருப்பதாக அரசியல் அறிவியல் வல்லுநர் பிரதாப் பானு மேத்தா தெரிவித்துள்ளார்.

ஏசிஜே ஊடகவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா மற்றும் ஊடகவியல் விருது வழங்கும் விழா இணையவழியில் நேற்று நடைபெற்றது. அதில் கல்லூரி முதல்வர் நளினி ராஜன் தொடக்க உரையாற்றினார். கல்லூரி தலைவர் சஷி குமார் வரவேற்றார். இதைத்தொடர்ந்து இணைய வழியில் பிரபாஜித் சிங், அர்சு ஜான் ஆகியோருக்கு, ‘புலனாய்வு ஊடக விருது’ வழங்கப்பட்டது. அதே போன்று, ‘சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கான கே.பி.நாராயண குமார் நினைவு ஊடக விருது’ சுகன்யா சாந்தாவுக்கு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து முதுநிலை ஊடகவியல் பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்ற 115 பேருக்கும், முதுநிலை வணிகம் மற்றும் பொருளாதார ஊடகவியல் பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்ற 12 பேருக்கும் பட்டயங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அரசியல் அறிவியல் வல்லுநர் பிரதாப் பானு மேத்தா பேசும்போது, “அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு உண்மைத்தன்மை இருக்கும். அதற்கென தனித்தன்மை, அடையாளம் ஆகியவை இருக்கும். அதை தற்போது யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. சமூக ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு உண்மைத் தன்மை இல்லாவிட்டாலும் வேகமாக பரவுகிறது. அதனால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களின் அடையாளம் மற்றும் உண்மைத்தன்மைக்கு சமூக ஊடகங்கள் பெரும் சவாலாக உள்ளன” என்றார்.

‘இந்து’ என்.ராம் பேசும்போது, ``இன்று நாம் டிஜிட்டல் யுகத்தில் இருக்கிறோம். தற்போது தொழில்நுட்பமும், ஊடகவியலும் இணைந்து வேகமாக பயணித்து வருகிறது. பட்டயம் பெறும் இளம் ஊடகவியலாளர்கள் இதை கவனத்தில் கொண்டு, இந்த தளத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x