

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்களில் இருந்து மக்களுக்கு மீண்டு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும். கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி சேதம் ஏற்பட்டிருக்கும் என்று உத் தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் ஏற்பட்ட எல்லா பாதிப்புகளையும் அரசால் சரி செய்ய முடியாது என்ற நிலையில், இந்த பணியில் பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் துறை பெரு நிறுவனங்களும் (கார்ப் பரேட்) தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இந்தியா விலுள்ள 90 சதவீதம் பெரு நிறுவனங்களுக்கு தமிழகம்தான் மிகப்பெரிய சந்தையாக உள்ளது. வாழ்வளித்த தமிழகம் இப்போது மோசமான சூழலில் உள்ள நிலையில் அதற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டியது பெரு நிறுவனங்களின் கடமை. எனவே, தமிழகத்தில் வணிகம் செய்யும் அனைத்து தனியார் நிறுவனங்களும் தலா ஓர் ஒன்றியத்தை தத்தெடுத்து அங்கு மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தனது லாபத்தில் பாதியை கடலூர் மாவட்ட மக்களின் மறுவாழ்வு மற்றும் மறு சீரமைப்பு பணிகளுக்காக நன்கொடை வழங்க வேண்டும். மேலும் பெல், சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் நிவாரணப் பணிகளுக்கு பெருமளவில் உதவ வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.