Published : 04 Jun 2021 03:14 AM
Last Updated : 04 Jun 2021 03:14 AM

கரோனாவால் இறந்தோரின் உடல்களை தத்தனேரி, மூலக்கரை மயானங்களில் இலவசமாக எரிக்கலாம்: வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

மதுரை

கரோனாவால் இறந்தவர்களின் உடல்களை தத்தனேரி மற்றும் மூலக்கரை மயானங்களில் இன்று முதல் ஒரு மாத காலத்துக்கு மட்டும் இலவசமாக எரியூட்ட மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது என்று வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி சார்பில் மீனாட்சியம்மன் திருக்கோயிலில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ்சேகர் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் முன்னிலை வகித்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

இதில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: தமிழக அரசு கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மதுரை மாநகராட்சியில் கரோனா தொற்றால் இறந்தவர்களை எரியூட்டுவதற்கு தத்தனேரி மற்றும் கீரைத்துறையில் மின் மயானங்கள் செயல்பட்டு வருகின்றன. கரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களை உடனுக்குடன் எரியூட்டுவதற்கு மயானங்களில் கூடுதலாக இரண்டு மின் தகன மேடைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

மேலும் கரோனாவால் இறந்த ஏழை, எளிய மக்களின் உடல்களை மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை சிவகங்கை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள ஆகியோர்களுடன் இணைந்து (தத்தனேரி மற்றும் மூலக்கரை மயானங்களில்) இன்று முதல் ஒரு மாத காலத்துக்கு மட்டும் இலவசமாக எரியூட்டப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல்களுக்கு மாநகராட்சியின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை 842 842 5000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் தளபதி, பூமிநாதன், மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை, நகரப் பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் குமரகுருபரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x