

புதுச்சேரியில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. காலை 8.30 மணி நிலவரத்தின்படி 157 மிமீ மழை பதிவாகி இருந்தது. கிழக்கு கடற்கரை சாலை, புதுச்சேரி-விழுப்புரம் சாலைகளில் மழைநீர் ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரியில் பெய்த தொடர் மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 382 வீடுகள், 7000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் தற்போது வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
புதுச்சேரியில் நேற்று இரவு முதல் பெய்யத் தொடங்கிய மழை, தொடர்ந்து இன்றும் விடிய விடிய பெய்தது. காலை 8.30 மணி நிலவரத்தின்படி 157 மிமீ மழை பதிவாகி இருந்தது.
தொடர் மழையால் தாழ்வான பகுதிகளான ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், நடேசன் நகர், முதலியார்பேட்டை சுதானா நகர், வாழைக்குளம், துப்ராயப்பேட்டை, வாணரப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்தது. கிராமப்பகுதிகளில் பல இடங்களில் வீடுகளில் மழைநீர் புகுந்தது. ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
போக்குவரத்து பாதிப்பு
சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலையிஸ் சிவாஜி சிலை அருகிலும், புதுச்சேரி- விழுப்புரம் சாலையிலும் இடுப்பளவு மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்படைந்தது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இரு சக்கரவாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர். முக்கிய சந்திப்புகளான இந்திரா காந்தி சிலை, ராஜிவ் காந்தி சிலை, பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்களில் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் அகற்றி வந்தது. மீண்டும் பலத்த மழை பெய்ததால், வடிகால்களில் நீர் வெளியேறவில்லை.
புதுச்சேரியில் பல பகுதிகளில் ஆட்சியர் மணிகண்டன் இன்று ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், "7000 உணவுப் பொட்டலங்கள் தொடர் மழையைக் கருத்தில் கொண்டு சைமன் கர்தினால் பாதுகாப்பு மையத்தில் 40 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டனர். மேலும் பொதுமக்களுக்காக மத்திய உணவுக கூடம் மூலம் 7000 உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டார்.
வீடுர் அணை திறப்பு
தொடர் மழையால் புதுச்சேரி எல்லையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வீடுர் அணையில் மீண்டும் நீர் நிரம்பியது. தற்போது வினாடிக்கு 3700 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அதே போல் சாத்தனூர் அணையில் இருந்தும் 2900 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், தென்பெண்ணை ஆறு, சங்கராபரணி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நிரம்பும் நிலையில் ஊசுட்டேரி
புதுவையின் பெரிய ஏரியான ஊசுட்டேரியில் தற்போது முழு கொள்ளளவான 3.6 மீட்டரில் தற்போது 3.3 மீட்டர் நீர் உள்ளது. தொடர் மழையால் ஏரி முழுமையாக நிரம்பும் நிலையை எட்டியுள்ளது. ஏரி நிரம்பினால் உபரி நீர் முழுதும் சங்கராபரணி ஆற்றில் திறந்து விடப்படும். மொத்தமுள்ள 84 ஏரிகளில் 61 ஏரிகள் தற்போது நிரம்பியுள்ளன. முக்கிய ஏரியான பாகூர் ஏரி அதன் கொள்ளளவான 3.6 மீட்டரை எட்டியுள்ளது.
நிரம்பி வழியும் தடுப்பணைகள்: புதுச்சேரியில் 23 அணைக்கட்டுகள், தடுப்பணைகள் உள்ளன. அனைத்தும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சுத்துக்கேணி தடுப்பணையில் அளவை மீறி அபாயக்கட்டத்துக்கு மேல் நீர் ஓடுகிறது.
இடைக்கால நிவாரணம் தேவை
மழை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள பணிகள் தொடர்பாக முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: புதுச்சேரிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 100 கோடி தேவை என்று மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். கன மழையால் தண்ணீர் தேங்குவதை தடுக்க வாய்க்கால்கள் சீரமைக்க டெண்டர் விடப்பட்டு பாதி அளவுக்கு பணிகள் நடந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை பம்ப் செட் மூலம் செய்து வருகிறார்கள்." என்று தெரிவித்தார்.