

சிவப்பு ரேஷன் அட்டைதாரர்கள், ‘ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா’ மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு இலவச அரிசி வழங்கும் நான்கு மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
‘ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா’உலகில் மிகப்பெரிய அரசு மருத்துவக் காப்பீடு திட்டம். இத்திட்டம் 2018-ல் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தியாவில் 50 கோடி பயனாளிகளை இலக்காக கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய அரசு நிதியுதவி அளிக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம் இது. இத்திட்டத்தில் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை ஒரு வருடத்துக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.
இத்திட்டம், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் செலவுகளை உள்ளடக்கும். புதுச்சேரி அரசு கடந்த ஜனவரி 13-ம் தேதியன்று இத்திட்டத்தின் கீழ் அனைத்து சிவப்பு அட்டைதாரர்களுக்கும் காப்பீடு வழங்க அனுமதி வழங்கியது.
இதன் மூலம் 83 ஆயிரம் சிவப்பு அட்டை உள்ள குடும்பங்கள் பயன் அடைவார்கள். இதற்காக சிவப்பு நிற குடும்ப அட்டை (அசல்) மற்றும் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களைக் கொண்டு இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.
இதனை மருத்துவமனைகளில் மட்டும் இல்லாமல், தற்சமயம் 4 இலவச அரிசி வழங்கும் மையங்களிலும் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். அந்த வகையில் அரசு உயர்நிலைப்பள்ளி மேட்டுப்பாளையம், (தொடர்புக்கு ராஜ்குமார் 74484 46840), அரசு தொடக்கப் பள்ளி ஜீவானந்தபுரம் லாஸ்பேட்டை (தொடர்புக்கு வசீகரன் 81483 99306), அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி வாணரபேட்டை (தொடர்புக்கு ஆகாஷ் 63827 30676), யூத் ஹாஸ்டல் முத்தியால்பேட்டை (தொடர்புக்கு நிர்மல் குமார் 99944 54271) ஆகிய இடங்களில் பதிவு செய்து கொள்ளலாம். மேற்கூறிய இடங்களில் நேற்று முன்தினம் தொடங்கி நாளை (ஜூன் 5) வரை நடைபெறுகிற முகாமில் பொதுமக்கள் தங்கள் ஆவணங்களை கொண்டு பதிந்து, மறுநாள்‘ஆயுஷ்மான் பாரத்’ அட்டையை அவசியம் மறக்காமல் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இத்திட்டத்தின் கீழ் ஏழைமக்க ளுக்கும், சாமானிய மக்களுக்கும் நல்ல தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும். மேலும் தகவல் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணை (1800-425-7157) தொடர்பு கொள்ளலாம் என்று புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.