Published : 04 Jun 2021 03:15 AM
Last Updated : 04 Jun 2021 03:15 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு கார் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு: தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி

தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணையிலிருந்து கீழக்கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீரை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திறந்துவிட்டார். உடன் எம்எல்ஏக்கள் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா, ஆட்சியர் செந்தில் ராஜ்.

தூத்துக்குடி

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கார் சாகுபடிக்கு பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளை திறக்க தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்தசில தினங்களுக்கு முன் உத்தரவிட்டார். அதன்பேரில் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கடந்த இரு தினங்களுக்கு முன் அணைகளில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணிஆற்றின்மருதூர் அணைக்கட்டில் இருந்து கீழக்கால் மற்றும் மேலக்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ்தலைமை வகித்தார். தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும்கால்நடை பராமரிப்புத் துறைஅமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் இரு கால்வாய்களிலும்பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவைத்தார். எம்எல்ஏக்கள் ஊர்வசிஎஸ்.அமிர்தராஜ் (வைகுண்டம்), எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தாமிரபரணி ஆற்றில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்வாய்களில் வரும் 15.10.2021 வரைதண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் மருதூர் கீழக்கால்வாய் பகுதியில் உள்ள 7,144ஏக்கர், மேலக்கால் பகுதியில் உள்ள 11,807 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். வைகுண்டம், ஏரல், திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய வட்டப் பகுதியில் உள்ள நிலங்களில் கார் சாகுபடிக்காக இந்த தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகுண்டம், வடகால், தென்கால் கால்வாய் பகுதி பாசன பரப்பையும் சேர்த்து 41,798 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 25 ஆண்டுகளுக்கு பிறகு கார் சாகுபடிக்கு தற்போது தான் தண்ணீர்திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட மக்களின் சார்பாகவும், விவசாயிகள் சார்பாகவும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மருதூர் அணைக்கட்டு பகுதியை தூர்வாரி நீர் பிடிப்பு கொள்ளளவு பரப்பினை அதிகரிக்க முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் அணைகளை தூர்வாரி விரிவுபடுத்திட முதல்வர் உத்தரவிடுவார் என்றார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) உதவி பொறியாளர்கள் பத்மநாபன், நவீன்பிரபு, வைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

25 ஆண்டுகளுக்கு பிறகு கார்சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து தமிழர்விடுதலைக் கொற்றம் அமைப்பின் தலைவர் அ.வியனரசு கூறியதாவது: தண்ணீர் இருப்பையும், மழைநீர் வரவையும் துல்லியமாகக் கணக்கிட்டு இந்த ஆண்டுமுன்கூட்டியே கார் சாகுபடிக்குஅனுமதி அளித்றது உத்தரவிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், இதற்கு நடவடிக்கை எடுத்த கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x