

கண்ணமங்கலம் அருகே அதிமுக கொடிக் கம்பத்தின் நிறத்தை மாற்றிவிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப் படத்தை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் அதிமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.
தி.மலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூர் கிராமத்தில் கடந்த 2005-ம் ஆண்டு எம்ஜிஆர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அச்சிலை அருகே அதிமுக கொடி கம்பம் உள்ளது.
இந்நிலையில், எம்ஜிஆர் சிலையின் பீடம் மற்றும் கொடி கம்பத்தின் நிறத்தை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் மாற்றியுள்ளனர். மேலும், கொடி கம்பத்தின் முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப் படம் வைக்கப்பட்டுள்ளது. இதை யறிந்த அதிமுகவினர் ஒன்று திரண்டு எம்ஜிஆர் சிலை முன்பு கூடினர்.
அப்போது அவர்கள் கூறும் போது, “அதிமுக கொடி கம்பத்தை மீண்டும் நிறுவ வேண்டும். உடனடியாக கருணாநிதி படத்தை அகற்ற வேண்டும். எம்ஜிஆர் சிலை மற்றும் கொடி கம்பத்தின் நிறத்தை மாற்றியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
காவல் நிலையத்தில் புகார்
இதுசம்பந்தமாக காவல் நிலை யத்தில் அதிமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் காவலர் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.