

கருப்புப் பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த தமிழகத்துக்கு உடனடியாக 30000 மருந்துகளை வழங்குமாறு வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனுக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:
கரோனா பெருந்தொற்ற சமாளிக்க மத்திய அரசு செய்துவரும் தொடர் உதவிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிலையில், தமிழகத்தில் கரோனாவிலிருந்து மீண்டவர்களில் சிலருக்கு மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
கருப்புப் பூஞ்சை பாதிப்பு அறிவிக்கப்படும் நோயாக பட்டியலிடப்பட்ட பின்னர், இந்நோயைத் தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் இதுவரை 673 நபர்கள் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கத் தேவையான லிப்போசோமால் ஆம்போடெரிசின் பி மருந்தின் தேவை பலமடங்கு அதிகரித்துள்ளது.
மாநில அரசு ஏற்கெனவே 35000 குப்பிகள் மருந்துகளுக்கு ஆர்டர் செய்திருக்கிறது. ஆனால், அதன் விநியோகம் மத்திய அரசின் ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே கொடுக்கப்படுகிறது. இதுவரை 1790 குப்பிகள் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்திருக்கிறது.
கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த தமிழ்நாட்டிற்கு 30,000 ஆம்போடெரிசின் பி மருந்துக் குப்பிகளை வழங்க வேண்டும். இதில் தனிப்பட்ட கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.