Last Updated : 03 Jun, 2021 06:46 PM

 

Published : 03 Jun 2021 06:46 PM
Last Updated : 03 Jun 2021 06:46 PM

காரைக்குடியில் 50 நரிக்குறவர் குடும்பங்களுக்கு ரேஷன்கார்டு இல்லை: அரசு அறிவித்த ரூ.2 ஆயிரம் கூட பெற முடியாமல் தவிப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 50 நரிக்குறவர் குடும்பங்களுக்கு ரேஷன்கார்டு இல்லாததால், அரசு அறிவித்த நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம் கூட பெற முடியாமல் தவிக்கின்றனர்.

காரைக்குடி வேடன்நகரில் 150-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் பறவைகளை வேட்டையாடுவது, திருவிழாக்கள், பேருந்து நிலையங்களில் சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்களை விற்பனை செய்வது போன்ற தொழில்களை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.

கரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பின்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் உணவிற்கே சிரமப்படுகின்றனர். மேலும் அங்குள்ளவர்களில் 50 குடும்பங்களுக்கு ரேஷன்கார்டு கூட இல்லை. இதனால் அரசு அறிவித்த நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம் கூட பெற முடியவில்லை.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த குமார் கூறியதாவது: "கடந்த ஆண்டு, தொடரந்து பல மாதங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோல் இந்தாண்டும் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஓராண்டிற்கு மேலாக தொழில் செய்ய முடியவில்லை. கடந்த ஆண்டு அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் உணவுப் பொருட்கள் வழங்கினர்.

ஆனால் இந்தாண்டு யாரும் உணவு வழங்க முன்வரவில்லை. உணவின்றி சிரமப்படுகிறோம். இதையடுத்து சிலர் உணவுக்காகவும், குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் வாங்கவும் பிச்சை எடுக்கின்றனர். மேலும் 50 குடும்பங்கள் ரேஷன்கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றாமல் விட்டுவிட்டோம்.

இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியவில்லை. தற்போது முதல்வர் அறிவித்துள்ள ரூ.2 ஆயிரத்தை கூட வாங்க முடியவில்லை. அதேபோல் வீடுகளிலேயே குழந்தைகள் பிறப்பதால், பிறப்பு சான்றும் பெறுவதில்லை. இதனால் எங்கள் ரேஷன்கார்டுகளில் குழந்தைகளின் பெயர்களையும் சேர்க்க முடியவில்லை. அரசு தான் உதவி செய்ய வேண்டும், என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x