Published : 03 Jun 2021 05:44 PM
Last Updated : 03 Jun 2021 05:44 PM

ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் கரோனா உதவித் தொகை வழங்கிடுக: கே.எஸ்.அழகிரி, கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர் அனைவருக்கும் கரோனா உதவித் தொகை வழங்கிட வேண்டும் என, கே.எஸ்.அழகிரி, கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

கே.எஸ்.அழகிரி, தலைவர், தமிழக காங்கிரஸ்

தமிழகத்தில் முதல்வராக கடந்த மே 7 ஆம் தேதி பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் எந்த தரப்பிலிருந்து கோரிக்கை வைத்தாலும் அதை கனிவுடன் பரிசீலித்து, உடனுக்குடன் முடிவுகளை எடுத்து தீர்வு கண்டு வருகிறார். இத்தகைய செயல்பாட்டின் மூலம் கட்சி எல்லைகளை கடந்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக கருதப்படுகிற பத்திரிகையாளர்களுக்காக கரோனா தொற்றால் உயிரிழந்த அவர்களது குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும், சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்படும் என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை பத்திரிகையாளர்கள் மனம் திறந்து பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.

கரோனா தொற்று காலத்தில் களத்திற்கு சென்று செய்தி சேகரிக்கும்போது கரோனா தொற்று ஏற்பட்டு பலர் உயிரிழந்திருப்பதைக் கருத்தில் கொண்டு முதல்வர் இத்தகைய முடிவுகளை அறிவித்துள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.

அதேநேரத்தில், அரசு அங்கீகார அட்டை, மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை, இலவச பேருந்து அட்டை போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒன்றை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் உதவித்தொகை வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு மிகப்பெரும்பாலான பத்திரிகை மற்றும் ஊடகத்தினருக்கு பயனளிக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் பத்திரிகையாளர்களிடம் இருக்கிறது. அந்த அச்சத்தை போக்கும் வகையில் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

அரசு அங்கீகார அடையாள அட்டை என்பது நிறுவனத்தில் 12 பேருக்குள் தான் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் அவர்கள் பொறுப்புகளில் இருப்பவர்களாக உள்ளனர். ஆனால், இந்த அங்கீகார அடையாள அட்டை இல்லாமல்தான், களத்துக்குச் செல்கின்ற, நாள்தோறும் பணியாற்றுகின்ற பெரும்பாலான பத்திரிகை மற்றும் ஊடகப் பணியாளர்கள் இருந்து வருகின்றனர். அவர்களுக்கும் முதல்வர் அறிவித்திருக்கும் உதவித்தொகை சென்றடைய வேண்டும்.

இதற்கு நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை மூலமோ, பாரம்பரியமிக்க சென்னை பத்திரிகையாளர் சங்கம் (எம்.யு.ஜெ.), சென்னை நிருபர்கள் சங்கம் மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பத்திரிகையாளர் நலனுக்காக பாடுபட்டு வருகிற சங்கங்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ள குழுவின் மூலமோ உதவித்தொகை வழங்கலாம்.

இதேபோன்று, கரோனா தொற்றால் உயிரிழந்த அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இதன்மூலம், தமிழக முதல்வர் அறிவித்திருக்கிற பத்திரிகையாளர் நலத்திட்ட உதவிகள் முழுமையான பலனை தரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கரோனா தொற்று காலத்திலும் உயிரை துச்சமென நினைத்துப் பணியாற்றி வரும் அனைத்துப் பத்திரிகையாளர்களும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகையும், யாரேனும் இறந்துவிட்டால் அவர்களது குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

கரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காலத்தில் மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கும் நிலையில், தங்களின் உயிரைப் பணையம் வைத்து கரோனா பரவல் சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அரசின் தடுப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்துவது என, 24 மணி நேரமும் இரவு - பகலாக ஊடகவியலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்கள் பெற்று வரும் உரிமைகள் ஊடகத் துறையினருக்கும் வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளது ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், அரசின் அங்கீகார அட்டைகள் வைத்திருக்கும் ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே முதல்வரின் அறிவிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், அடையாள அட்டை இல்லாத ஆயிரக்கணக்கான ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரிதும் கவலை ஏற்பட்டுள்ளது.

மேலும், காட்சி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளர், செய்திப் பிரிவு பணியாளர்கள், உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் குழு உறுப்பினர்கள், அச்சு ஊடகங்களில் அச்சிடப்பட்ட பத்திரிக்கை கட்டுநர்கள் தொடங்கி, மாவட்ட தலைநகர் நிருபர்கள், வட்டத் தலைநகர், ஒன்றியங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள நிருபர்கள், நிழற்பட நிருபர்கள், வாசகர்களுக்கு பத்திரிகை விநியோகிப்பவர்கள் என, அனைவரையும் ஊடகப் பணியாளர்களாகவே கருத வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போதைய விதியை தளர்த்தி, அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரியும் அனைவருக்கும் கரோனா நிவாரண சலுகைகள், உரிமைகள் கிடைத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், கடந்த ஆண்டு கரோனா முதல் அலையின் போது உயிரிழந்த ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்காத நிலை உள்ளது.

எனவே, தமிழக முதல்வர் இதையும் கருத்தில் கொண்டு உயிரிழந்த ஊடகவியலாளர்கள் அனைவரின் குடும்பத்திற்கும் உடனடியாக நிவாரணம் வழங்கிடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x