

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி கரூர் மாவட்டத் திமுக சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 4 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று (ஜூன் 3ம் தேதி) தொடங்கிவைத்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்த நாளையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள 3,19,816 ரேஷன் அட்டைதாரர்களுக்குக் கரூர் மாவட்ட திமுக சார்பில் கரோனா நிவாரணமாக தலா 4 கிலோ அரிசி வீதம் ரூ.4 கோடி மதிப்பில் 1,279 டன் அரிசி வழங்கப்படுகிறது.
கோடங்கிப்பட்டியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 4 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். மேலும் பிரேம் மஹாலில் அரிசி பேக்கிங் செய்யப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டார்.
முன்னதாக, கரூர் கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் என்.மணிராஜ், சிறுபான்மையினர் அணி துணைச்செயலாளர் முனவர்ஜான், துணைச் செயலாளர்கள் மகேஸ்வரி, பூவை ரமேஷ்பாபு, நகரப் பொறுப்பாளர்கள் (மத்திய நகரம்) எஸ்.பி.கனகராஜ், (வடக்கு) கரூர் கணேசன், (தெற்கு) வழக்கறிஞர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு
கரூர் மாவட்டம் வெள்ளியணை, ராகவேந்திரா ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உணவு வழங்கினார்.
மரக்கன்று நடுதல்
கரூர் நகராட்சி கோடங்கிப்பட்டியில் 1,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மரக்கன்றுகள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து மரக்கன்று நட்டார். கரூர் எம்.பி. செ.ஜோதிமணி, எம்எல்ஏக்கள் குளித்தலை இரா.மாணிக்கம், அரவக்குறிச்சி பி.ஆர்.இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த மு வடநேரே உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.