

கரோனா தொற்று காலத்தில் களப்பணியாற்றிவரும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல்துறையினருக்கு ரூபாய் 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
“கோவிட்-19 பெருந்தொற்று, உலகளவில் மட்டுமல்ல இந்தியாவில், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கோவிட் தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் காரணமாக காவல்துறைப் பணியாளர்கள் உட்பட பல்வேறு முன்களப் பணியாளர்கள் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர்.
அவர்களது இன்றியமையாத பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களது பணியினை ஊக்குவிக்கும் விதமாகவும் காவல்துறையைச் சேர்ந்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1,17,184 ஆளிநர்களுக்கு ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) வீதம் ஊக்கத் தொகை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்”.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.