

அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன என்று திமுக மகளிரணித் தலைவரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
50 ஆண்டு காலம் திமுக தலைவர், 5 முறை தமிழக முதல்வர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. தமிழகத்தில் சமூக நீதிக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும் பாடுபட்ட முக்கியத் தலைவர்களில் ஒருவர். தமிழக முதல்வராக பதவி வகித்த காலத்தில் ஏழை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர்.
அவரின் பிறந்தநாள் ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கருணாநிதியின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடம், கோடம்பாக்கம் முரசொலி அலுவலகம், கோபாலபுரம்- சி.ஐ.டி காலனி இல்லங்களில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும்போது திமுக மகளிரணித் தலைவரும் மக்களவை எம்..பி.யும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியும் உடன் இருந்தார்.
இதற்கிடையே தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தந்தையை நினைவுகூர்ந்துள்ள கனிமொழி, ’’அறை முழுவதும் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் அறிவும் நிறையச்செய்யும் அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன’’ என்று பதிவிட்டுள்ளார்.