ஊடகங்களின் செய்தியாளர்களை முறைப்படுத்தி உதவிகள் வழங்கிடுக: வைகோ

வைகோ: கோப்புப்படம்
வைகோ: கோப்புப்படம்
Updated on
1 min read

ஊடகங்களின் செய்தியாளர்களை முறைப்படுத்தி, உதவிகள் வழங்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (ஜூன் 03) வெளியிட்ட அறிக்கை:

"ஊடகங்களின் செய்தியாளர்களை, கரோனா எதிர்ப்புப் போரின் முன்களப் பணியாளர்களாக அறிவித்து, உடனடி உதவித்தொகையாக ரூ.5,000; கரோனா தாக்கி உயிரிழந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தியும் ஆணை பிறப்பித்த, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, செய்தியாளர்கள் நெஞ்சார்ந்த நன்றியும், பாராட்டுகளும் தெரிவித்து வரவேற்று இருக்கின்றார்கள்.

ஆனால், தமிழ்நாடு முழுமையும் சேர்த்து, அரசு அடையாள அட்டை பெற்று இருக்கின்ற சுமார் 1,500 பேர் மட்டுமே இந்த வளையத்திற்குள் வருகின்றார்கள். முறையாக விண்ணப்பித்த பலருக்கு, அடையாள அட்டை கிடைக்கவில்லை. எத்தனையோ பேர் தகுதி இருந்தும் விண்ணப்பிக்காமல் இருக்கின்றார்கள். 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகங்களில் பணிபுரிந்து வருகின்ற பல செய்தியாளர்கள், கேமரா மேன்கள், படக்கலைஞர்கள், செய்தி வாசிப்பாளர்களுக்கும் கூட, அரசு அடையாள அட்டை கிடைக்கவில்லை.

எனவே, அரசு ஏற்பு அளித்து இருக்கின்ற செய்தித்தாள்கள், தொலைக்காட்சி நிறுவனங்களின் அடையாள அட்டை பெற்று இருக்கின்ற துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள், படக்கலைஞர்கள் அனைவருக்கும், அரசு உதவித் தொகை கிடைத்திட ஆவன செய்திட வேண்டும் என, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கின்றேன்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in