Published : 03 Jun 2021 12:23 PM
Last Updated : 03 Jun 2021 12:23 PM

சென்னையில் மிதிவண்டிப் போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

உலக மிதிவண்டி தினத்தையொட்டி தனது ட்விட்டர் பதிவில் சென்னையில் மிதிவண்டி போக்குவரத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும் என ராமதாஸ் குறிப்பிட்டு அரசை வலியுறுத்தியுள்ளார்.

90 -களில் வரை மிதிவண்டிகள் சாதாரணமாக சாலைகளில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டதை கண்டிருக்கலாம். எரிபொருள் செலவு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மிதிவண்டிகள் மூலம் பயணிக்கும் பொதுமக்கள் அதன்மூலம் உடற்பயிற்சியும் கிடைத்ததால் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

நாளடைவில் இருசக்கர வாகனங்கள் உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகள் வியாபாரச் சந்தையாக மாற்ற 50 சிசி முதல் 360 சிசி வரை இரு சக்கர வாகனங்களை சந்தையில் இறக்கியும், அதற்கு சுலப தவணைத்திட்டத்தையும் அறிமுகப்படுத்தியதால் மெல்ல மெல்ல இருசக்கர வாகனங்கள் மிதிவண்டிகளின் இடத்தை ஆக்கிரமித்தது.

விளைவு வீட்டில், 2000 ம் ஆண்டுகளில் உடற்பயிற்சி மையத்தில், உடற்பயிற்சிக்கான கருவியாக மாறிப்போனது மிதி வண்டிகள். நகரங்களிலிருந்து ஒழிக்கப்பட்ட மிதிவண்டிகள் கிராமங்களில் இருந்தபோதிலும் அங்கும் இருசக்கர மொபட் வகை வாகனங்களால் மிதிவண்டிகள் பயன்பாடு குறைந்து போனது.

உலக நாடுகளில் பல நாடுகள் சுற்றுசூழல், எரிபொருள் தேவையை குறைக்க மிதிவண்டிகளை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கின்றன. இதற்காக தனி பாதையையே உருவாக்கியுள்ளனர். தமிழகத்திலும் ஸ்மார்ட் சிட்டி என உருவாக்கி அங்கு மட்டும் மிதிவண்டிகள் பயன்பாட்டை பேருக்கு ஊக்குவிப்பதுபோன்று செயல்முறையில் வைத்துள்ளனர்.

இன்று உலக மிதிவண்டி தினம் என்பதால் அதன் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் மிதிவண்டி போக்குவரத்தை அதிகரிக்க முயலவேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டர் பதிவு:

“உலக மிதிவண்டி நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அனைவரும் இயன்றவரை மிதிவண்டி பயணத்தை கடைபிடிக்க இந்த நாளில் உறுதியேற்போம். மிதிவண்டி பயணம் உடல்நலன், பொருளாதார நலன், சுற்றுசூழல் நலன், விபத்தில்லா போக்குவரத்து அனைத்துக்கும் வழிவகுக்கும்.

மிதிவண்டி பயணத்தை ஊக்குவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். சென்னையில் மிதிவண்டி போக்குவரத்துக்கான தனிப்பாதைகளை அதிகரிக்க வேண்டும். முடங்கிக் கிடக்கும் வாடகை மிதிவண்டித் திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டும்.

மிதிவண்டி பயணத்தை ஊக்குவிக்க அனைத்துப் பிரிவினருக்கும் அவற்றை மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும். அதற்கான செலவை ஈடுகட்ட இரு சக்கர ஊர்திகள், நான்கு சக்கர ஊர்திகள் மீதான வரிகளை உயர்த்துவதில் தவறு இல்லை”.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x