

தமிழகத்தில் 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2-ம் கட்ட கரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
மாத ஊதியம் இல்லாத கோயில் பணியாளர்களுக்கு கரோனா நிவாரண உதவி, மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு தொகை வழங்குதல் ஆகிய திட்டங் களையும் முதல்வர் தொடங்கி வைக் கிறார்.
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களை காக்கும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள 2 கோடியே 9 லட்சத்து 81,900 குடும்பங்களுக்கு முதல்கட்டமாக கடந்த மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. மே 31 வரை 98.4 சதவீதம் குடும்பங்கள் நிவாரண தொகையை பெற் றுள்ளனர். விடுபட்டவர்கள், ஜூன் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2-ம் கட்டமாக ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண நிதி வழங்கும் பணியை முதல்வர் தொடங்கி வைக்கிறார். இதுதவிர, ரேஷன் கடைகளில் 14 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
தற்போது ஜூன் மாதத்துக்கான பொருட்கள் விநியோகத்துக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. நிவாரண நிதி மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் விநியோகத்துக்கான அறிவிப்பு தனியாக வெளியிடப்படும் என தெரிகிறது.
கோயில் பணியாளர்கள்
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ் ஒரு கால பூஜையுடன் இயங்கும் 12,959 கோயில்களில் நிலையான மாத சம்பளம் ஏதுமின்றி பணியாற்றி வரும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரி கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் உதவித் தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங் கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
மேலும், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர், நீதிபதிகள் ஆகிய முன்களப் பணியாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம், கரோனா தொற்றால் உயி ரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கும் திட்டத் தையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
2-ம் கட்ட நல உதவிகள்
‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறையின்கீழ் 2-ம் கட்டமாக பயனாளி களுக்கு அரசின் பயன்களை வழங்கும் பணியையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைச் செயலர், பல்வேறு துறை களின் செயலர்கள், உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஓய்வுகால பணப் பலன்கள்
தமிழக அரசின்கீழ் செயல்படும் 8 போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து ஏராளமானோர் ஓய்வு பெற்றுள்ளனர். 2020 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஓய்வுபெற்ற பல்வேறு பிரிவு ஊழியர்களுக்கு ஓய்வு கால பணப்பலன்கள் இதுவரை வழங்கப்படவில்லை. அவர்களுக்கான பணப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டன. இந்நிலையில், நிலுவையில் இருந்த ரூ.497.32 கோடியை 2,457 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி 2020 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டங்களில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பயன்களின் நிலுவைத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். ரூ.497.32 கோடியை 2,457 பேருக்கு வழங்கும் அடையாளமாக 6 ஊழியர்களுக்கு நிலுவைத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, போக்குவரத்துத் துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.