குடும்ப விவசாயத்துக்கான ஆசிய - பசிபிக் மாநாடு: சென்னையில் ஆகஸ்ட் 7-ல் தொடங்குகிறது

குடும்ப விவசாயத்துக்கான ஆசிய - பசிபிக் மாநாடு: சென்னையில் ஆகஸ்ட் 7-ல் தொடங்குகிறது
Updated on
1 min read

குடும்ப விவசாயத்துக்கான ஆசிய - பசிபிக் மாநாடு, சென்னையில் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. உணவு மற்றும் விவசாய அமைப்பும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.

இதுகுறித்து பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன், உணவு மற்றும் விவசாய அமைப்பின் இந்திய பிரதிநிதி பீட்டர் கென்மோர், சிறு விவசாயிகள் - விவசாய கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் பிரவேஷ் ஷர்மா ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத் தில் குடும்ப விவசாயத்துக்கான ஆசிய பசிபிக் மாநாடு, வரும் ஆகஸ்ட் 7-ல் தொடங்கி 10-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் குடும்ப பண்ணைகளின் பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமூக நிலைப்பாடு, அவற்றில் காணப்படும் சமூக பாலின பாகுபாடு, ஊட்டச்சத்து பரிமாணத்தின் லாபத்தை அதிகரிக்கும் முறைகள் குறித்து விவாதிக்கப்படும். அதன் மூலம் சிறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படவும், உறுதியான வரு மானம் கிடைக்கவும் வழிமுறைகள் கண்டறியப்பட உள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட குடும்ப விவசாயத்துக்கான சர்வதேச ஆண்டு 2014. இது தேசிய அளவிலும், உலக அளவிலும் குடும்பப் பண்ணைகளை அமைக்கவும் பாதுகாக்கவும் ஒரு தனிப்பட்ட வாய்ப்பை வழங்குகிறது. குடும்ப விவசாயம் என்பது நிலையான வாழ்வாதாரத்துக்கு வழி என்பது மட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சிக்கும் பல்லுயிர்களின் பாதுகாப்புக்கும் நிலைத்த வேளாண்மையின் அடிப்படைக்கும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in