Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM

கொடைக்கானல் மலையில் டிரக்கிங் சென்ற 10 பேர் மீது வழக்குப்பதிவு: ஜீப், இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதி செம்பிரான்குளம் மலை கிராமத்தில் (டிரக்கிங்) மலையேற்றம் சென்ற வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட 10 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு ஜீப், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரோனா 2-வது அலையால் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதியில் இருந்து இளைஞர்கள் சிலர் பொய்யான காரணங்களைக் கூறி கொடைக்கானலுக்குச் சென்றுள்ளனர். மேலும் கொடைக்கானலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உதவியுடன் கொடைக்கானல் வடகவுஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட செம்பிரான்குளம் கிராமத்தின் மலைமீது இளைஞர்கள் 10 பேர் டிரக்கிங்சென்றுள்ளனர். அந்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.

இதுகுறித்து வடகவுஞ்சி கிராம நிர்வாக அலுவலர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஹரிஹரன், கோபிநாத், கொடைக்கானலைச் சேர்ந்த முத்து, ஆனந்த், வினோத் குமார், மணிகண்டன் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில், ஊரடங்கு விதிகளை மீறி விவசாயப் பணி என்று பொய் சொல்லி கொடைக்கானில் டிரக்கிங் சென்றது தெரியவந்தது.இவர்களுடன் மதுரையைச் சேர்ந்தவிஜயராகவன், கண்ணன், ஜெயபிரகாஷ், பிரித்திவிராஜ் உள்ளிட்ட10 பேர் மீது பேரிடர் மேலாண்மைசட்டம் மற்றும் நோய் தொற்றுப்பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் பயன்படுத்திய ஜீப், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் அரசு விதிகளை மீறிபொய் காரணம் கூறி கொடைக்கானல் வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனகாவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x