கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவில் இருந்து மீள அடுத்தகட்ட தொழில் வளர்ச்சிக்கான திட்டமிடல் வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு தொழில் துறையினர் வேண்டுகோள்

திருப்பூர் காந்திநகரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனம். (கோப்பு படம்)
திருப்பூர் காந்திநகரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனம். (கோப்பு படம்)
Updated on
1 min read

கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவில் இருந்து மீள தொழில் வளர்ச்சிக்கான அடுத்தகட்ட திட்ட மிடலை மேற்கொள்ளாவிட்டால், கரோனா பாதிப்பு குறைந்த பிறகு திருப்பூரில் பல தொழில் நிறுவனங்கள் திறக்கப்படாமலேயே போகும் அபாயம் உள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆடை உற்பத்தித் துறையில் பின்னலாடை உற்பத்தியில் சர்வதேச கவனம் பெற்றது திருப்பூர் பின்னலாடை துறை. ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மேற்கொண்டு வந்த நிலையில், கரோனா தொற்று பரவலால் வர்த்தகத்தில் ஏற்ற,இறக்கங்களை சந்தித்து வருகிறது.

கரோனா பாதிப்பிலிருந்து மெல்லமெல்ல மீண்டு வந்த நிலையில், கரோனா 2-ம் அலைபாதிப்பால் ஏற்பட்டுள்ள உற்பத்தித்தடை பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளது.

இதனால் வெளிநாட்டு ஆர்டர்கள், தங்களது கையை விட்டுப்போகும் நிலையில் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர்.கரோனா தாக்கத்துக்குப் பிறகு, அடுத்தகட்ட தொழில் வளர்ச்சிக்கான திட்டமிடலை மத்திய, மாநில அரசுகள் தற்போதே மேற்கொள்ளாவிட்டால், திருப்பூரில் பாதிப்பு குறைந்த பிறகு பல தொழில் நிறுவனங்கள் திறக்கவே முடியாத சூழல் ஏற்படும் என்கின்றனர் தொழில் துறையினர்.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் (டீமா) எம்.பி.முத்துரத்தினம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

கரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் உள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. கரோனா பாதிப்புக்கு பிறகு, அடுத்தகட்ட தொழில் வளர்ச்சிக்கான திட்டமிடலை தற்போதே தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். ஜவுளித்துறை சார்ந்த தொழில் நிறுவனங்களின் பாதிப்புகளை ஒரு தனி ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான குழுவை நியமித்து, கண்டறிய வேண்டும். அக்குழுவினர் தரும் அறிக்கை அடிப்படையில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, உரிய தொழில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொழில் நிறுவனங்கள் நல்லநிலைக்கு வர வங்கிகள் மூலமாக, எளிய முறையில் கடன்களை அளிக்க மத்திய அரசு நடவடிக்கைஎடுக்கவேண்டும். கடந்த ஆண்டு அளித்த கடன் திட்டத்தால் பெரும்பாலும் பெரிய நிறுவனங்களே பயனடைந்தன. பாதிக்கப்பட்ட சிறிய நிறுவனங்களுக்கு கடனுதவி கிடைக்கவில்லை. ஏற்றுமதிக்கு, ஊக்கத்தொகையை அதிகப்படுத்தி வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை குறைக்க வேண்டும். இல்லையெனில், பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரில் கரோனா பாதிப்பு குறைந்த பிறகு, பல தொழில் நிறுவனங்களை திறக்கவே முடியாத நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in