ஆம்புலன்ஸில் காத்திருக்கும் தொற்றாளர்களுக்கு தனி மருத்துவர் குழு மூலம் சிகிச்சை: சேலம் அரசு மருத்துவமனை டீன் தகவல்

ஆம்புலன்ஸில் காத்திருக்கும் தொற்றாளர்களுக்கு தனி மருத்துவர் குழு மூலம் சிகிச்சை: சேலம் அரசு மருத்துவமனை டீன் தகவல்
Updated on
1 min read

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸில் வருபவர்கள் உள் அனுமதிக்காக காத்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கு ஆம்புலன்ஸில் சிகிச்சை அளிக்க முதுநிலை மருத்துவர் தலைமையிலான தனி குழு மூலம் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் கரோனா நோயாளிகள் படுக்கை வசதி கிடைக்காமல் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நிலை கடந்த நாட்களில் ஏற்பட்டது. இந்நிலையில், தொற்றாளர்கள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அடங்கிய ஆம்புலன்ஸ் கவனிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறியதாவது:

சேலம் அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே 835 ஆக இருந்த ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை தற்போது 1,100 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மருத்துவமனையில் சாதாரண படுக்கை உள்ளிட்ட மொத்தம் 1,258 படுக்கை வசதிகள் உள்ளது.

இருப்பினும், தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வருவது அதிகமாக உள்ளது. எனவே, இங்கு வரும் அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் வருபவர்கள் உள் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய அவசியத்தைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஆம்புலன்ஸில் வருபவர்களுக்கு வெளிப்புற சிகிச்சை வார்டில் ஆக்சி ஜனுடன் சிகிச்சை அளித்து, பரிசோ தனைக்குப் பின்னர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், ஆம்புலன்ஸில் காத்திருக்க நேரிட்டால், அதுவரை அவர்களுக்கு ஆம்புலன்ஸிலேயே சிகிச்சை வழங்க முதுநிலை மருத்துவர், மருத்துவர், செவிலியர், பயிற்சி மருத்துவர், ஒரு கண்காணிப்பாளர் ஆகியோர் கொண்ட தனி குழு அமைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. சிகிச்சைக்கு அதிக எண்ணிக்கையில் கரோனா நோயாளிகள் வரும் நேரத்தில், அவர்கள் காத்திருக்க ஷெட் ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கைகள் மூலம் சிகிச்சைக்காக காத்திருக்க வேண்டிய நேரத்தை குறைக்கவும், நெரிசலை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in