

டிஜிட்டல் மீட்டரில் மின்பயன்பாட்டு அளவை நுகர்வோர் எவ்வாறு அறிந்து கொள்ளலாம் என்பது குறித்து, மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. தற்போது கரோனா 2-வது அலை தீவிரமாகப் பரவி வருவதால், கணக்கெடுக்க மின்வாரிய ஊழியர்கள் கடந்த மே மாதம் வீடுகளுக்கு நேரில் வர இயலவில்லை.
இதையடுத்து, மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையிலான கணக்கெடுப்பு காலத்தில் உள்ளவர்கள், கடந்த 2019 மே மாதம் செலுத்திய கட்டணத்தைச் செலுத்தலாம் என்றும், புதிய நுகர்வோர் கடந்த மார்ச் மாதம் செலுத்திய மின்கட்டணத்தைச் செலுத்தலாம் எனவும் மின்வாரியம் அறிவித்தது.
நுகர்வோர் புகார்
ஆனால், இந்த இரண்டு முறையிலும் அதிக மின்கட்டணம் வருவதாக, நுகர்வோர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, மின்நுகர்வோர், தங்கள் வீட்டு மீட்டரில் பதிவாகி உள்ள மின் பயன்பாட்டைக் கணக்கெடுத்து, வாட்ஸ்-அப், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம், பிரிவு அலுவலக உதவிப் பொறியாளர் அலுவலகத்துக்கு அனுப்பினால், செலுத்த வேண்டிய மின்கட்டணம் குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டிஜிட்டல் மின் மீட்டரில் பதிவாகி உள்ள யூனிட் அளவை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதில் நுகர்வோர் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மின்னணு மீட்டரில் வரிசையாக எண்கள் மாறுபடும். அதில், தேதி, நேரத்துக்குப் பிறகு சில எண்களுடன் கே.டபிள்யூ.எச். என்று வரும். அந்த எண்தான் பயன்பாடு (யூனிட்) அளவாகும். அதைக் குறிப்பிட்டு அனுப்பினால், செலுத்த வேண்டிய மின் கட்டணம் குறித்து தெரிவிக்கப்படும்’’ என்றனர்.