Last Updated : 03 Jun, 2021 03:14 AM

 

Published : 03 Jun 2021 03:14 AM
Last Updated : 03 Jun 2021 03:14 AM

வேகமாக பரவி வரும் கரோனா 2-வது அலை காரணமாக திருச்சியில் மே மாதத்தில் மட்டும் 370 பேர் உயிரிழப்பு: 50 வயதுக்கு மேற்பட்டோர் பாதுகாப்பாக இருக்க மருத்துவர்கள் அறிவுரை

கரோனா 2-வது அலை வேகமாக பரவிவருவதால், திருச்சி மாவட்டத்தில் மே மாதத்தில் மட்டும் 370 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏப்.30-ம் தேதி வரை 211 பேர் மட்டும் உயிரிழந்துள்ள நிலையில், மே 31-ம் தேதி வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 581 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பவர்களில் 50- 80 வயதுக்குட்பட்டவர்களே அதி கம் என்பதால், இந்த வயதினர் கவனமுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 28 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கரோனா தாக்கம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகமாக உள்ளது.

மே மாதத்தில் மட்டும் 370 பேர் இறப்பு

கடந்த ஏப்ரல் இறுதி வாரத்தில் 8.04 சதவீதமாக இருந்த இம்மாவட்டத்தின் ‘பாசிட்டிவிட்டி ரேட்’ (100 பேரிடம் பரிசோதனை செய்தால், அதில் கரோனா உறுதி செய்யப்படுவோர் விகிதம்) மே முதல் வாரத்தில் 16.36 சதவீதமாக உயர்ந்து 4-வது வாரத்தில் 24 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. இதைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாவட்ட நிர்வாகம் பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்போர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் 4, பிப்ரவரியில் 3, மார்ச்சில் 2, ஏப்ரல் மாதத்தில் 26 ஆக இருந்த கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 2-வது அலை வேகமாக பரவிய மே மாதத்தில் 370 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த ஆண்டு முதல் நிகழாண்டு ஏப்.30-ம் தேதி வரை மொத்தம் 211 பேர் மட்டும் இறந்துள்ள நிலையில், மே 31-ம் தேதி வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ளது.

வயது வாரியாக இறப்பு விகிதம்

கரோனா தொற்று காரணமாக மே 28-ம் தேதி வரையிலான காலகட்டத்துக்குள் இறந்த 299 பேரில், 21-30 வயதுக்குட்பட்ட 7 பேர், 31-40 வயதுக்குட்பட்ட 15 பேர், 41-50 வயதுக்குட்பட்ட 28 பேர், 51- 60 வயதுக்குட்பட்ட 72 பேர், 61- 70 வயதுக்குட்பட்ட 76 பேர், 71- 80 வயதுக்குட்பட்ட 68 பேர், 81- 90 வயதுக்குட்பட்ட 30 பேர், 91 -100 வயதுக்குட்பட்ட 3 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கவலைக்குரிய முதியவர்கள் நிலை

இதுகுறித்து மருத்துவர்கள் மேலும் கூறியதாவது:

சுகாதாரத்துறையின் கணக்குப்படி திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் இதுவரை நிகழ்ந்த மொத்த மரணங்களில் 82 சதவீதத்தினர், 51 - 100 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர்.

இதிலும் குறிப்பாக மரணிப்பவர்களில் 71 சதவீதம் பேர் 50-80 வயதுக்கு உட்பட்டவர்களே. கரோனா 2-வது அலையில் 50 வயதுக்கு உட்பட்டோர், இளம் வயதினர் அதிகளவில் பாதிக்கப்பட்டாலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் உரிய சிகிச்சை பெற்றும், மன தைரியத்துடன் இருந்தும் மீண்டு விடுகின்றனர். ஆனால் முதியவர்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள் ளது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தயங்குவது, கரோனா அறிகுறி ஏற்பட்ட பிறகும்கூட பரிசோதனை செய்ய தாமதப்படுத்துவது, இணை நோய்கள் இருப்பது, நோய் குறித்த அச்சம் போன்றவை இதற்கான காரணங்களாக உள்ளன.

வீட்டை விட்டு வெளியேறக்கூடாது

எனவே, 50 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் கரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வரும் வரை வீட்டுக்குள்ளேயே இருப்பது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களை வீட்டுக்குள் அனுமதிப்பதைத் தவிர்க்கலாம்.

தாமதமின்றி தடுப்பூசி செலுத் திக் கொள்ள வேண்டும். வீட்டிலுள்ள இளம் வயதினரும் அவசியமின்றி வெளியே சென்று தொற்றுக்கு ஆளாகி, வீட்டிலுள்ள முதியவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது.

தொற்றுக்கான அறிகுறி தென்பட்டால் உடனடியாக சோதனை செய்து கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், மாவட்டந்தோறும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கென அரசு தனி கரோனாவார்டை உருவாக்கி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x