

புதுச்சேரியில் பாஜகவுக்கு சபாநாயகர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சபாநாயகர், அமைச்சர்களை பாஜக கட்சித்தலைமை அறிவிக்கும் என்று எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு பிறகு புதுச்சேரி பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் தெரிவித்தார்.
என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக இடையே அமைச்சரவை, சபாநாயகர் பங்கீடு பேச்சுவார்த்தை ஒரு மாதத்துக்கு பிறகு உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பாஜக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் மாநிலத்தலைவர் சாமிநாதன் தலைமையில் இன்று மாலை நடந்தது. இக்கூட்டத்துக்கு பாஜக சட்டப்பேரவை கட்சித்தலைவர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் பாஜக எம்எல்ஏக்கள் 6 பேர், நியமன எம்எல்ஏக்கள் 3 பேர், ஆதரவு தெரிவித்துள்ள சுயேட்சை எம்எல்ஏக்கள் மூவரில் இருவரும் பங்கேற்றனர்.
ஏனாம் சுயேட்சை எம்எல்ஏ ஊரில் இல்லாததால் பங்கேற்கவில்லை. கூட்டத்துக்கு பிறகு மாநிலத்தலைவர் சாமிநாதன் இன்று இரவு
செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைச்சர்கள்,சபாநாயகர் பங்கீடு முடிந்தது. பாஜகவிற்கு சபாநாயகர் பதவியுடன் அமைச்சர்கள் பதவியை தர உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் பதவி பாஜகவுக்கு எத்தனை என்பதும், பாஜகவில் யாருக்கு என்ன பதவி என்பது பற்றியும் கட்சி தலைமை தெரிவிக்கும். அனைத்து பேச்சுவார்த்தையும் சமூகமாக முடிவடைந்துள்ளது.
பாஜகவில் அமைச்சர்கள், சபாநாயகர் யார் என்ற விவரங்களையும் கட்சி மேலிடத்தில் வெளியிடுவார்கள். ஐந்து ஆண்டுகள் வலுவான கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கும். மத்திய அரசு திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி மாநிலம் வளர்ச்சி அடையும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பமில்லை.திமுக-காங்கிரஸ் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறது. ரங்கசாமி முதல்வராக பாஜக எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டு தந்தோம்.
அதையடுத்து அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் யாரும் சந்தித்து பேச முடியாததால் அமைச்சரவை அமைவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அவர் குணமடைந்தவுடன், பேசி நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அமைச்சரவை அமைந்து அமைச்சர்கள் பொறுப்பேற்பார்கள்" என்று குறிப்பிட்டார்.
கட்சி மேலிட பொறுப்பாளர்கள் விரைவில் முதல்வருடன் சந்திப்பு
பாஜக சட்டமன்ற தலைவர் நமச்சிவாயம் கூறுகையில், "தேசிய ஜனநாயக கூட்டணியில் சபாநாயகர்,அமைச்சர்கள் பங்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் கட்சி மேலிட பொறுப்பாளர்கள் புதுச்சேரி வந்து முதல்வரை சந்தித்து அறிவிப்பை வெளியிடுவார்கள்.
அகில இந்திய தலைமைதான், துணை முதல்வர் மற்றும் பிற பதவிகள் குறித்து அறிவிப்பார்கள். கட்சித்தலைமையின் எந்த முடிவையும் ஏற்பதாக ஒப்புதல் தருவதாக கையெழுத்திட்டுள்ளோம். நாங்களும் ஆளும்கட்சியில் ஓர் அங்கம்தான்.
என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டு தான் முதல்வர் பொறுப்பு ஏற்றார். நாங்கள் பொறுப்புகளை பங்கீட்டு கொள்கிறோம். " என்று குறிப்பிட்டார்.