Published : 02 Jun 2021 08:02 PM
Last Updated : 02 Jun 2021 08:02 PM

சென்னை காப்பகங்களில் உள்ள வீடற்றோர், ஆதரவற்றோருக்கு கோவிட் தடுப்பூசி: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிடம் உடல்நிலை குறித்து விசாரித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி காப்பகங்களில் உள்ள வீடற்றோர் மற்றும் ஆதரவற்றோருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஜூன் 02) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடற்றோர் மற்றும் ஆதரவற்ற முதியோர், சிறுவர்கள், மனநலம் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் தங்கிப் பயனடைய 55 சிறப்புக் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில், மருத்துவமனைகளில் அமைந்துள்ள 13 காப்பகங்கள் மற்றும் சிறார்களுக்கான 8 காப்பகங்களைத் தவிர்த்து, மீதமுள்ள 34 காப்பகங்களில் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநகராட்சியின் சார்பில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட 34 காப்பகங்களில் தங்கியுள்ள 1,137 நபர்களில் 733 நபர்களுக்கு முதல் தவணை கோவிட் தடுப்பூசியும், 174 நபர்களுக்கு 2-ம் தவணை கோவிட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 230 நபர்களுக்கும் தடுப்பூசி இவ்வார இறுதிக்குள் செலுத்தப்படும்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இன்று பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-159-ல் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான காப்பகத்திற்கு நேரில் சென்று, அங்கு கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 30 நபர்களின் உடல்நிலை குறித்து காப்பக நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x