

செங்கல்பட்டு எச்எல்எல் தடுப்பூசி மையத்தில் உடனடியாக தடுப்பூசி உற்பத்தி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், குத்தகைக்கு வழங்க தமிழக அரசு ஏற்கெனவே கோரிக்கை வைத்துள்ள நிலையில், அதனைப் பரிசீலித்து இது தொடர்பாக உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவலைத் தடுக்க ஒரே வழி தடுப்பூசியை அதிகப்படுத்துவது ஆகும். மத்திய அரசு 45 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசியை இலவசமாக வழங்குகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசியை மாநிலங்கள் கொள்முதல் செய்துகொள்ளக் கூறியுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு தடுப்பூசிக்காக உலகளாவிய டெண்டர் மூலம் 3.5 கோடி தடுப்பூசி கொள்முதலுக்கு டெண்டர் கோரியுள்ளது. மறுபுறம் உள்நாட்டில் உள்ள வாய்ப்புகள் மூலம் 1.5 கோடி தடுப்பூசிகளைத் திரட்டவும், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைச் செயல்பட வைப்பதன் மூலம் தடுப்பூசி தயாரிப்பை அதிகப்படுத்தவும் முடிவு செய்தது. இதற்காக முத்ல்வர் ஸ்டாலின் தடுப்பூசி மையத்தைப் பார்வையிட்டு பிரதமருக்குக் கடிதம் எழுதினார். இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும் முதல்வர் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைத் தமிழகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க குத்தகைக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், “செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைத் தமிழகத்துக்கு குத்தகைக்கு விட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பிற மாநிலங்களிலும் இதேபோன்று இருக்கக்கூடிய ஆலைகளை போர்க்கால அடிப்படையில் உற்பத்தி தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மக்களுக்கான அடிப்படை உரிமைகள் பிரிவு ஆர்ட்டிகிள் 32-ன் கீழ் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க மாநில அரசிடம் குத்தகைக்கு விட கடந்த 26ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலை நேரில் சந்தித்து தமிழக அரசுக்கு செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைக் குத்தகைக்கு வழங்கக் கோரிய தங்களது திட்டத்தை அளித்தனர்.
இந்தியாவில் 130 கோடி மக்கள்தொகை உள்ளது. உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இங்கு கரோனா இரண்டாம் அலை பரவி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பரவலைத் தடுக்க ஒரே தீர்வு தடுப்பூசி மட்டுமே.
மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த 310 கோடி டோஸ் தடுப்பூசிகள் தேவை. தற்போதைய நிலையில் ஸ்டாக் இல்லை. 3.2% மக்களுக்கு மட்டுமே 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
எனவே 45 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த வேண்டும். அதற்கு 68 கோடி டோஸ் தடுப்பூசி தேவை. 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டோர் 59.5 கோடி பேர் இந்தியாவில் உள்ளனர். அவர்களுக்கு 119 கோடி டோஸ் தடுப்பூசி தேவை. எனவே நமக்கு 180 கோடி டோஸ் தடுப்பூசி தேவை.
தற்போது மாதம் ஒன்றுக்கு 7 கோடி டோஸ் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதை அதிகரிக்க, தொற்றைத் தடுக்க துரிதமான நடவடிக்கை வேண்டும். தடுப்பூசி போடும் அளவு குறைந்தால் தொற்றின் பாதிப்பு அதிகமாக இருக்கும். அதற்கு நாம் வழி செய்துவிடக் கூடாது.
அதனால் எந்தெந்த வழிமுறைகளில் தடுப்பூசி உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளதோ அந்த வகைகளில் முயற்சியை செய்ய வேண்டும். அந்த வகையில் அனைத்து அம்சங்கங்களும் கூடியதாக செங்கல்பட்டு தடுப்பூசி மையம் உடனடியாகத் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கும் நிலையில் தயாராக உள்ளது.
செங்கல்பட்டு தடுப்பூசி மையம் மஞ்சள் காமாலை, அம்மை, வெறிநாய்க்கடி தடுப்பூசி தயாரிக்க ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆலை 2012ஆம் ஆண்டு ரூ.594 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. ஆனால் அதை முடிக்கும்போது ரூ.909 கோடியாக 2019-ல் செலவு அதிகரித்தது. ஆலையை இயக்குவதற்கான தொகையை விடுவிப்பதற்கான ஒப்புதல் கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆகவே இதை உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதன் மூலம் அதிக அளவில் தடுப்பூசி தயாரிக்க முடியும்.
ஆகவே, உடனடியாக மத்திய அரசு தடுப்பூசிக்கான தேவையை உணர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைத் தமிழக அரசிடம் குத்தகைக்கு வழங்க வேண்டும். இதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.