

திருப்பூர் சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா பொருட்கள் வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.விமல் கூறியதாவது: சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அரசால் வழங்கப்படும் விலையில்லா மின் விசிறி, கிரைண்டர், மிக்சி ஆகியவை வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக, மைதானத்தில் அமர வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பள்ளியில் பொருட்கள் வைக்கப்பட்டபோதே, எதிர்ப்பு தெரிவித்தோம்.
சுமார் 1300 மாணவர்கள் படித்துவரும் இப்பள்ளியில், 2 வகுப்பறைகளில் விலையில்லாப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு வகுப்பறையில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், மூன்று வகுப்புகளின் மாணவர்கள் மைதானத்தில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.முருகனிடம் பேசியபோது, “2 வகுப்பறையில் மட்டும் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்வு எழுதுவதற்காக, மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே அமர்ந்திருப்பார்கள். போதிய வகுப்பறைகள் உள்ளன” என்றார்.