

திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக கரோனா தொற்று பரவலாக குறைந்தபோதும், உயிரிழப்புகள் குறையவில்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிக பாதிப்புக்களை ஏற்படுத்திவருகிறது. தொடக்கத்தில் தினமும் 200 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுவந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து 300 க்கும் மேல், 400 க்கும் மேல் என தினசரி தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
கடந்த மே 23 ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 542 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்புகள் தினமும் ஏற்படத் தொடங்கியது.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்காக படுக்கை வசதிகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
இதையடுத்து முழு ஊரடங்கு அமலுக்கு வந்தநிலையில் கரோனா தொற்று படிப்படியாக குறையத்தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று மே 23 ம் தேதி 542 ஆக இருந்தநிலையில், படிப்படியாக குறைந்து மே 30 ம் தேதி 334 பேர், மே 31 ல் 323 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஜூன் 1 ம் தேதி மேலும் குறைந்து 297 மட்டுமே கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகினர்.
கரோனா தொற்று பாதிப்பு குறைந்துவந்த நிலையில் உயிரிழப்புகள் குறையவில்லை. மே 30 ம் தேதி ஏழு பேர், மே 31 ல் 5 பேர், ஜூன் 1 ம் தேதி நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் 3336 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நியாயவிலைக்கடைகள் திறப்பால் தேவையின்றி கடைமுன்பு மக்கள் சமூக இடைவெளியின்றி காணப்படுகின்றனர். இவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். மேலும் அத்தியாவசிய தேவைகள் என்ற பெயரில் பலர் வாகனங்களில் நகரங்களில் வலம் வருகின்றனர். இவர்களையும் போலீஸார் கட்டுப்படுத்தவேண்டும்.
இதுபோன்ற சிறுசிறு நிகழ்வுகளில் கவனம் செலுத்தினால் திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பை வெகுவாக குறைக்கமுடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.