

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட அருந்ததியினர் கரோனா ஊரடங்கால் தினமும் ஒருவேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படுகிறோம் என, கண்ணீருடன் முதல்வருக்கு சமூகவலைதளம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் பிரபாகரன் காலனியில் 300-க்கும் மேற்பட்ட அருந்ததியினர் வசிக்கின்றனர். இவர்கள் செருப்பு தைக்கும் தொழில் செய்து பிழைப்பு நடத்துகின்றனர்.
கரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பின்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் ஒன்றாக இணைந்து தாங்கள் தினமும் ஒருவேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படுகிறோம்.
குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட பணம் இல்லாமல் சிரமப்படுவதாக கண்ணீர் மல்க, சமூகவலைதங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் அப்பகுதியைச் சேர்ந்த சந்திரமதி கூறியதாவது: நாங்கள் செருப்பு தைக்கும் தொழில் செய்கிறோம். கடந்த ஆண்டு தொடர்ந்து பல மாதங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதேபோல் இந்தாண்டும் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஓராண்டிற்கும் மேலாக தொழில் செய்ய முடியவில்லை.
தற்போது வீட்டிலேயே முடங்கியுள்ளதால் ஒருவேளை சாப்பட்டுக்கே கஷ்டப்படுகிறோம். டீ குடித்து கூட பல நாட்கள் ஆகிவிட்டது. குழந்தைகளுக்கு பால் கூட வாங்க முடியாமல் தவிக்கிறோம். தமிழக முதல்வர் எங்களுக்கு உதவ வேண்டும், என்று கூறினார்.