

திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு, உதவித்தொகை ரூ.4,000, நிவாரணப் பொருட்கள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 02) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில், திருக்கோயில்களில் பக்தர்கள் வருகை இல்லாததால், இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் நிலையான மாதச் சம்பளம் ஏதுமின்றிப் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களுக்கு ரூ.4000 உதவித்தொகையும், சுமார் 1,000 ரூபாய் மதிப்பிலான 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் கொண்ட தொகுப்பும் வழங்கும் திட்டம் நாளை (ஜூன் 03) அன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் சுமார் 14,000 திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திருக்கோயில் வாயிலாக உரிமம் பெற்றவர்கள் பயன் பெறுகிறார்கள்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.