மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு முன்னாள் மாணவர்கள் உதவி: ரூ.15 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினர்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு முன்னாள் மாணவர்கள் உதவி: ரூ.15 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினர்
Updated on
1 min read

மதுரை அரசு ராஜாஜி மருத்துமனைக்கு அமெரிக்காவில் பணியாற்றும் முன்னாள் மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ரூ.15 லட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், செயற்கை சுவாசச் கருவிகளை வழங்கியுள்ளனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1,800க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சைப்பெறுகின்றனர். அவர்களுக்கான ஆக்ஸிஜன் படுக்கைகள் போதுமான அளவு இல்லை.

தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு இன்சூரன்ஸ் கார்டுகளை ஏற்க மறுப்பதாலும், கூடுதல் கட்டணம் கேட்பதாலும் நடுத்தர, ஏழை மக்கள் முழுக்க முழுக்க கரோனா சிகிச்சைக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையை நம்பியே உள்ளனர்.

இந்த மருத்துவமனைக்கு மதுரை மட்டுமில்லாது தென் மாவட்டங்கள் முழுவதும் இருந்து கரோனா நோயாளிகள் பரிந்துரை செய்யப்படுகின்றனர். அதனால், வார்டுகளில் சிகிச்சைப்பெறும் கரோனா நோயாளிகளுக்கான தேவைகள் அதிகமாக உள்ளன.

அதனால், மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் படித்த முன்னாள் மருத்துவ மாணவர்கள் பலர், தற்போது தனி நபர்களாகவும், குழுவாகவும் சேர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 1987 மற்றும் 1989ல் பயின்று தற்போது அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் இணைந்து இந்த பெருந்தொற்றுகாலத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான ஆக்ஜசிஜன் செறிவூட்டிகள், செயற்கை சுவாச கருவிகளை அனுப்பியுள்ளனர்.

இந்த மருத்துவ உபகரணங்கள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் டாக்டர் ரத்தினவேலிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடல் கடந்து பணியாற்றிய நிலையிலும் படித்த மருத்துவக் கல்லூரியையும், பயிற்சி எடுத்த மருத்துவமனையையும் மறக்காமல் உதவிகள் வழங்கிய அமெரிக்காவில் பணியாற்றும் அந்த மருத்துவர்களுக்கு டீன் ரத்தினவேலு மற்றும் மருத்துவர்கள் நன்றி தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in