Published : 02 Jun 2021 04:04 PM
Last Updated : 02 Jun 2021 04:04 PM

உதவி பேராசிரியர்கள் நியமனம்: கல்லூரி கல்வி இயக்குனரகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சிறுபான்மை கல்வி நிறுவன உதவி பேராசிரியர்கள் உட்பட நான்கு பேருக்கு, அவர்கள் நியமிக்கப்பட்ட ஆண்டில் இருந்து நியமன ஒப்புதல் வழங்க கல்லூரி கல்வி இயக்குனரகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வி கல்லூரியில் காலியாக இருந்த இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு முறையே, புனித கலாமேரி, லதா மற்றும் ஜான்சன் பிரேம்குமார், குளோரி டார்லிங் மார்கரெட் ஆகியோரை கல்லூரி நிர்வாகம், 2000 ஆம் ஆண்டு நியமித்தது.

இவர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் கோரி கல்லூரி நிர்வாகம், கல்லூரி கல்வி இயக்குனரகத்துக்கு விண்ணப்பித்த போது, நான்கு பேருக்கும் 2007 ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்ததாக ஒப்புதல் அளித்து, கல்லூரி கல்வி இணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்து, பணியில் சேர்ந்த 2000 ஆம் ஆண்டு முதல் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக் கோரி, நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளுக்கு பதிலளித்த கல்லூரி கல்வி இயக்குனரகம், மனுதாரர்கள் பணியாற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் கூடுதலாக உருவாக்க அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் இவர்கள் நியமிக்கப்பட்டதால் 2007 முதல் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், அதில் எந்த விதிமீறலும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், கல்லூரி தாக்கல் செய்த ஆவணங்களில் இருந்து நான்கு பேரும், பணி ஓய்வு மற்றும் பதவி உயர்வால் காலியான இடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது எனக் கூறி, 2007 ல் பணி நியமனம் செய்ததாக அளித்த ஒப்புதலை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், இவர்கள் நான்கு பேரும் நியமிக்கப்பட்ட ஆண்டில் இருந்து அவர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கி மீத சம்பள தொகையை ஆறு வாரங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, இந்த விவகாரத்தை கல்லூரி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x