பணி இடைநீக்கம் நீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கான படியை உரிமையாக கோர முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

பணி இடைநீக்கம் நீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கான படியை உரிமையாக கோர முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கான படியை அதிகரித்து வழங்கும்படி சம்பந்தப்பட்ட ஊழியர், உரிமையாக கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்திய குரூப் 1 தேர்வில் முறைகேடுகள் செய்ததாக, தேர்வாணைய அதிகாரி காசிராம் குமார் என்பவரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு காரணமாக 2018 ஆம் ஆண்டு மே மாதம் காசிராம்குமார், பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இடைநீக்க காலத்தில் அவருக்கு 50 சதவீத ஊதியம் படியாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஆறு மாதங்கள் கடந்தும் தனக்கு எதிராக குற்றப்பத்திரிகை அளிக்கப்படாததால், இடைநீக்க காலத்திற்கான படியை 75 சதவீதமாக அதிகரித்து வழங்கக் கோரியும், பணி இடைநீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணியமர்த்த கோரியும் காசிராம்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், மனுதாரரின் பணி இடைநீக்க உத்தரவு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படுவதாகவும், அவரை மீண்டும் பணியில் சேர்க்க முடியாது எனவும் பதிலளிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், பணி இடைநீக்கம் செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த பின், இடைநீக்க காலத்துக்கான படியை, 75 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என உரிமையாக கோர முடியாது எனவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும், காசிராம் குமாருக்கு எதிரான துறைரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இந்த விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்திவழக்கை முடித்து வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in