Last Updated : 02 Jun, 2021 03:53 PM

 

Published : 02 Jun 2021 03:53 PM
Last Updated : 02 Jun 2021 03:53 PM

ஆக்சிஜன் அளவு 90-க்குக் கீழ் இருந்தால் மட்டுமே கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதி: டீன் தகவல்

கோவை

கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆக்சிஜன் அளவு 90-க்குக் கீழ் உள்ள நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மருத்துவமனையின் டீன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’ஆர்டி- பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானவர்கள், சி.டி. ஸ்கோர் 13-க்கு மேல் இருப்பவர்கள், அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதி வழங்கப்படுகிறது. சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு 90-க்குக் கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் கரோனா நோயாளிகளை அனுமதிக்கிறோம். ஆக்சிஜன் அளவு 90 முதல் 95 வரை இருப்பவர்கள் கொடிசியாவில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகளில் அனுமதி பெறலாம்.

95-க்கு மேல் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். செவிலியர்களின் பற்றாக்குறையைப் போக்க கூடுதலாகச் செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று வரை 50 செவிலியர்கள் புதிதாக இணைந்துள்ளனர். இஎஸ்ஐ மருந்தகங்களில் இருந்து 42 பேர் பணியில் இணைய உள்ளனர். இஎஸ்ஐ மருத்துவமனை 450 படுக்கை வசதி கொண்டது. இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர்களே உள்ளனர்.

கரோனா சிறப்பு மருத்துவமனை என்பதால்தான் படுக்கைகளின் எண்ணிக்கை 1,250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்றபடி, மருத்துவமனை மேம்படுத்தப்படவில்லை. தீவிர இதய சிகிச்சைப் பிரிவு, டயாலிசிஸ், சிறுநீரகவியல் துறை மருத்துவர் போன்றோர் இங்கு இல்லை. அதனால்தான் கோவை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை இங்கிருந்து அனுப்புகிறோம்.

சென்னையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்றவை ஒரே தரத்தில் இருப்பவை. எனவே, அங்கு ஒரு மருத்துவமனையில் இருந்து வேறு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்ப மாட்டார்கள். இஎஸ்ஐ மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை 24 மணி நேரமும் நடைபெறுகிறது. ஆர்டி-பிசிஆர் பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது’’.

இவ்வாறு டீன் ரவீந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x