Published : 02 Jun 2021 03:44 PM
Last Updated : 02 Jun 2021 03:44 PM

சென்னையில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளன: மாநகராட்சி ஆணையர் தகவல்

ககன்தீப் சிங் பேடி: கோப்புப்படம்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளன என, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஜூன் 02) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"2020ஆம் ஆண்டு இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவத் தொடங்கியது. தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிலையிலான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு, மருத்துவ அவசரப் பயன்பாட்டு அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, தமிழக அரசால் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு கரோனா தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் விலையில்லாமல் வழங்கி வருகிறது.

மத்திய மற்றும் மாநில அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில், மாநகராட்சியின் நகர்ப்புற சமுதாய மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ள நபர்களுக்கும், அதனைத் தொடர்ந்து, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இத்துடன் மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் என, முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன.

குறிப்பாக, முதல்வர் மாற்றுத்திறனாளிகளுக்குத் தடுப்பூசி சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி, அவர்களுக்கு விரைந்து தடுப்பூசி வழங்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி சிறப்பு முகாமினை முதல்வர் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்குத் தடுப்பூசி வழங்க உதவி எண்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் பதிவு செய்யும் நபர்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு மிக அருகாமையில் அல்லது அவர்களது இல்லத்திற்குச் சென்று தடுப்பூசி வழங்க மாநகராட்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுநாள் வரை 2,464 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 195 நபர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் என, மொத்தம் 2,659 தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கே சென்று செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும் தடுப்பூசி வழங்கலாம் என, மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள நிலையில், தற்போதைய தடுப்பூசி இருப்பினைக் கருத்தில்கொண்டு, தமிழக அரசு 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் நாள்தோறும் செய்தித்தாள்கள் விநியோகம் செய்பவர்கள், பால் விநியோகிப்பவர்கள், தெருவோர வியாபாரிகள், மருந்தகங்கள் மற்றும் மளிகைக் கடைகளின் பணியாளர்கள், ஆட்டோ, கார், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், மின்துறைப் பணியாளர்கள், உள்ளாட்சித்துறை பணியாளர்கள், அனைத்து அரசுப் பணியாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், அத்தியாவசியப் பணிகளுக்கான தொழிற்சாலைகள் மற்றும் மின்னணு வர்த்தகப் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசியர்கள், மாநிலப் போக்குவரத்து ஊழியர்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து பணியாளர்கள் மற்றும் மாநிலப் பிற துறைகளின் தொழிலாளர்கள், கோவிட் பாதிப்புள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், பொதுமக்களுக்குச் சேவை புரியும் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

மேற்குறிப்பிட்ட தடுப்பூசி முகாம்களின் வாயிலாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், இதுநாள் வரை 15 லட்சத்து 34 ஆயிரத்து 439 (15,34,439) நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 4 லட்சத்து 88 ஆயிரத்து 706 (4,88,706) நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 31.05.2021 வரை 20 லட்சத்து 23 ஆயிரத்து 145 (20,23,145) தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு விலையில்லாமல் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசிகளைச் செலுத்துவதற்காக மாநகராட்சியின் சார்பில், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், தடுப்பூசி சிறப்பு முகாம்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மற்றும் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகள் மற்றும் மின்னணு வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு எனப் பல்வேறு வகைகளில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைத்து மேற்கூறிய இலக்கை மாநகராட்சி அடைந்துள்ளது.

மத்திய அரசின் தொகுப்பிலிருந்து மாநில அரசு வழங்கும் தடுப்பூசியின் எண்ணிக்கையைப் பொறுத்து மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், பொதுமக்கள் அனைவரும் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து உயிர் காக்கும் ஆயுதமான தடுப்பூசியினைச் செலுத்தி, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x